காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கருடசேவை
By DIN | Published On : 16th August 2019 04:29 AM | Last Updated : 16th August 2019 04:29 AM | அ+அ அ- |

வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற கருட சேவை.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பெருமாள் தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத பௌர்ணமியன்று பெருமாள் தங்கக் கருட வாகன சேவைக் காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அத்திவரதர் திருவிழா நடந்து வரும் நிலையில் விழாவின் 46-ஆவது நாளான வியாழக்கிழமைஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு பெருமாள் தங்கக்கருட வாகன சேவை விமரிசையாக நடந்தது. பெருமாள் திருக்கோயிலில் உள்ள கண்ணாடி அறையிலிருந்து வேதாந்த தேசிகர் சந்நிதி முன்புறம் உள்ள வாகன மண்டபத்துக்கு எழுந்தருளி அங்கிருந்து தங்கக்கருட வாகனத்தில் அலங்காரமாகி கோயிலின் உள்வீதிகளில் திருவீதியுலா வந்தார்.
திருக்கோயில் உள்வீதியில் உள்ள அத்திவரதர் வைக்கப்படவுள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் கஜேந்திர மோட்ச லீலை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தேசிகர் சந்நிதி முன்புறம் உள்ள வாகன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். பின்னர் பெருமாள் கண்ணாடி அறைக்கு எழுந்தருளும் வைபவமும் நடந்தது.கண்ணாடி அறையில் வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் செந்தில்வேலன் (வேலூர்)அன்புமணி (கன்னியாகுமரி), செயல் அலுவலர்கள் செந்தில்குமார், தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.