ரூ.62.84 கோடி மதிப்பில் ஏரிகள், குளங்கள் சீரமைப்பு : அமைச்சர் தொடங்கி வைத்தார்

ரூ.62.84 கோடி மதிப்பில் ஏரிகள், குளங்கள் சீரமைப்பு : அமைச்சர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 188 சிறுபாசன ஏரிகள், 1,164 குளங்கள் மற்றும் நீர் நிலைகளைச் சீரமைக்க ரூ.62.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக கால்வாய் கட்டுமானப் பணிகளை ஊரகத் தொழில்த


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 188 சிறுபாசன ஏரிகள், 1,164 குளங்கள் மற்றும் நீர் நிலைகளைச் சீரமைக்க ரூ.62.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக கால்வாய் கட்டுமானப் பணிகளை ஊரகத் தொழில்துறை அமைச்சர்  பா.பென்ஜமின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 
தமிழ்நாடு நீர்வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் கீழ், நீர் நிலைகளைப் பாதுகாக்கவும், புனரமைப்புப் பணிகளுக்காகவும் 110 விதியின் கீழ், தமிழ்நாடு நீர்வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்கம் என்ற சிறப்புத் திட்டத்தை அண்மையில் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். 
இத்திட்டத்துக்காக முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகள் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டு வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெமிலி சிற்றேரியில்  குடிமராமத்துப்  பணிகள்  மற்றும் கரைகளை பலப்படுத்துவதற்கு ரூ.5.74 லட்சம்,  கால்வாய்கள் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.18.73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்தார்.  மாவட்டத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்
பேரவை உறுப்பினர் கே.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக ஊரகத் தொழில்துறை அமைச்சர்  பா.பென்ஜமின்  கலந்துகொண்டு, கால்வாய் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 188 சிறுபாசன ஏரிகள், 1,164  குளங்கள் மற்றும்  நீர்நிலைகளை ஆழப்படுத்தும் பணிகளுக்காக மொத்தம் ரூ.62.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். 
இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கவிதா, ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் காஞ்சனமாலா, மண்டல துணை வட்டாட்சியர்கள் பூபாலன், வெங்கடேசன், ஒப்பந்ததாரர் மூர்த்தி, அதிமுக மாவட்டத் துணைச்  செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசன்ன வசந்தி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com