எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: அதிமுகவினர் மரியாதை

தமிழக முன் னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, அதிமுகவினர் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: அதிமுகவினர் மரியாதை


தமிழக முன் னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, அதிமுகவினர் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
இதையொட்டி, அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில், பல்வேறு இடங்களில் அவரது உருவச் சிலை, உருவப் படம் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மேற்கு மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில், திரளான அதிமுகவினர் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 
அதுபோல், உத்தரமேரூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில், மேற்கு மாவட்டச் செயலர் உத்தரமேரூர், சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கட்சிக் கொடியை ஏற்றி, எம்.ஜி.ஆரின் வெங்கலச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஒன்றியச் செயலர்கள் அக்ரி நாகராஜன், பிரகாஷ் பாபு, மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலர் சத்யா, அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதுபோல், அமமுக உள்ளிட்ட கட்சியினர், அமைப்பினர், வணிகர்கள் உள்ளிட்டோர் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர். 
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, எம்ஜிஆர் சிலை வண்ண மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 
மதுராந்தகம் ஒன்றிய அதிமுக செயலர் கோ.அப்பாதுரை தலைமை வகித்து, எம்ஜிஆர் சிலைக்கு ரோஜா மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். 
நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் சிவசங்கரன், வசந்தி, ரவிச்சந்திரன், விநாயகம், கருங்குழி பழனி, வழக்குரைஞர் கிருபாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், அருகில் உள்ள ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, நகர அதிமுக செயலர் வி.ரவி தலைமை வகித்து, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் ஆர்.ஆனந்தன், சுபான், முத்து, கோவிந்தன், தங்கப்பன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு பேரூர் செயலர் பழனி தலைமை வகித்து, மாலை அணிவித்தார். 
நிகழ்ச்சியில், முன்னாள் பேரூராட்சி அதிமுக உறுப்பினர்களும், அதிமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளின் போது அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தண்டுகரை இ.கோவிந்தன் தலைமையில், கணையாழி ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர். 
அதுபோல், செங்கல்பட்டு நகரச் செயலர் செந்தில்குமார் தலைமையில், நிர்வாகிகள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியச் செயலர் கவுஸ்பாஷா தலைமையில், நிர்வாகிகள் சிங்கப்பெருமாள் கோயில் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணித்தனர். 
மறைமலைநகரில் நகரச் செயலர் ரவிகுமார், முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோபிக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். 
திருக்கழுகுன்றத்தில், கல்பாக்கம் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆறுமுகம் தலைமையில், வேலாயுதம், ஆனூர் பக்தவத்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். 
திருப்போரூரில், முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன் அதிமுக நிர்வாகிகளுடன் ஊர்வலமாகச் சென்று ரவுண்டானா பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். 
அதேபோல், எம்.பி. மரகதம் குமரவேல், திருப்போரூர் ஒன்றியச் செயலர் குமரவேல் ஆகியோர் தலைமையில், நிர்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com