காணும் பொங்கல்: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

காணும் பொங்கலையொட்டி, மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் பல்லாயிரக்கணக்கானோர் வியாழக்கிழமை
காணும் பொங்கல்: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்


காணும் பொங்கலையொட்டி, மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் பல்லாயிரக்கணக்கானோர் வியாழக்கிழமை வருகை தந்தனர்.
மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அரசுப் பேருந்து, சிறப்புப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் வருகை தந்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாமல்லபுரத்தில் சுற்றுலா வந்த மக்கள் வெண்ணெய் உருண்டைப்பாறை, மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் குடும்பத்துடன் ஓய்வெடுத்தனர். 
சுற்றுலா இடங்களைப் பார்க்க வந்தவர்களில் பலர் கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், உள்ளே செல்லாமல், வெளியே நின்றபடி, சிற்பக் கலைகளைப் பார்த்து ரசித்துவிட்டு, அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை பகுதி ஆகிய இடங்களுக்குச் சென்றனர். 
வெண்ணெய் உருண்டைப் பாறை பகுதியில் பலர் தங்கள் குடும்பத்தினர்களுடனும், நண்பர்களுடனும் அமர்ந்து சாப்பிட்டு இளைப்பாறினர். 
மேலும், வெண்ணை உருண்டைப் பாறை பகுதியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சறுக்கி விளையாடி மகிழ்ந்தனர். அதுபோல் கடற்கரைக் கோயில் பகுதியில் இளைஞர்கள் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனர். கடற்கரைப் பகுதியிலும் பலர் சென்று ரசித்தனர். கடற்கரை பகுதிகள் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் மக்கள் நடக்கக் கூட இடம் இல்லாமல் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றனர். 
சுற்றுலாவுக்கு வந்திருந்த வாகனங்களை நிறுத்த முடியாமலும் அவதிக்குள்ளாகினர். இதனால் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறினர்.
காணும் பொங்கலையொட்டி, போக்குவரத்துத் துறை சார்பில், தாம்பரம், சென்னை, கல்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 
இப்பேருந்துகளை மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்த இடமில்லாததால், அனைத்துப் பேருந்துகளும் புறவழிச் சாலையில் நிறுத்தப்பட்டன. 
மேலும், மாமல்லபுரம் நகருக்குள் வருவதற்கு 10 சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. பலர் ஆட்டோவிலும் பயணம் செய்தனர்.
காணும் பொங்கலையொட்டி, மாமல்லபுரத்தில் டிஎஸ்பி சுப்பாராஜ், காவல் ஆய்வாளர்கள் ரவிகுமார் சஞ்சீவி, அய்யனாரப்பன் ஆகியோர் மேற்பார்வையில் காவலர்கள், சிறப்புப் படை காவலர்கள் உள்ளிட்ட போலீஸார், கடலோர பகுதி கண்காணிப்பு போலீஸார் மற்றும் மீனவர்கள் தயார்நிலையில் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com