அத்திவரதர் பெருவிழா : அரசு பொருட்காட்சிக்காக ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

அத்திவரதர் பெருவிழாவையொட்டி நடைபெறவுள்ள அரசு பொருட்காட்சிக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அத்திவரதர் பெருவிழா : அரசு பொருட்காட்சிக்காக ஆட்சியர் தலைமையில் ஆலோசனை


அத்திவரதர் பெருவிழாவையொட்டி நடைபெறவுள்ள அரசு பொருட்காட்சிக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் பெருவிழா ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் மேட்டுத்தெரு நகரீஸ்வரர் திருக்கோயில் திடலில் தமிழ்நாடு அரசுப் பொருட்காட்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பொருட்காட்சியில் கலந்து கொள்ளவிருக்கும் அரசுத் துறை சார்ந்த  அலுவலர்கள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசித்தனர். 
அரசுத் துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்க வேண்டும். நாள்தோறும் பொருட்காட்சி நேரங்களில் தங்கள் துறை அரங்குகளைப் பார்வையிடும் பொதுமக்களுக்கு அரங்கு பற்றி விவரித்துக் கூற வேண்டும். இதற்காக, விவரம் தெரிந்த  அலுவலரை நியமிக்க வேண்டும்.
அத்திவரதர் பெருவிழாவுக்கு லட்சக்கணக்கானோர் வருகை தரவுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அரங்கைப் பார்வையிட வருகை தருவர். பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஏதுவாக பார்வையாளர் பதிவேடு வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அத்துடன், தேவையான அளவு தீத்தடுப்பு வாளிகள், தீயணைப்புக் கருவிகளை அரங்குகளில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அரசுப் பொருட்காட்சி தொடக்க விழா நடைபெறும் நாளுக்கு முன்னதாக துறைகள் அரங்க அலங்காரப் பணிகளை முடித்து அரங்குகளை தயார் நிலையில் வைக்கவேண்டும் என ஆட்சியர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, சார்-ஆட்சியர் செ.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மா.நாராயணன், மகளிர் திட்ட அலுவலர் சீனிவாச ராவ்  உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com