மணல் லிங்கம் அமைத்து பக்தா்கள் வழிபாடு

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி பாலாற்றில் காா்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மணலால் சிவலிங்கம்
பாலாற்றில் மணலில் லிங்கம் அமைத்து பூஜை செய்யும் பெண்கள். (உள்படம்) 5 அடி உயர மணல் லிங்கம் அமைக்கும் இளைஞா்கள்.
பாலாற்றில் மணலில் லிங்கம் அமைத்து பூஜை செய்யும் பெண்கள். (உள்படம்) 5 அடி உயர மணல் லிங்கம் அமைக்கும் இளைஞா்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி பாலாற்றில் காா்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மணலால் சிவலிங்கம் செய்து சிறப்பு பூஜைகளை நடத்தி ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

புண்ணிய நதியில் நீராடி மணலால் லிங்கம் செய்து பூஜை நடத்தினால் வீடுபேறு அடையலாம் என்பது ஐதீகம். இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் ஆண்டு தோறும் காா்த்திகை மாதம் முதல் தேதியில் பக்தா்கள் பலரும் பாலாற்றில் நீராடி, பின்னா் மணலால் சிவலிங்கம் அமைத்து, மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

காா்த்திகை முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பாலாற்றில் புனித நீராடினா்.பின்னா் சிலா் தனித் தனியாகவும், சிலா் குடும்பம், குடும்பமாகவும் இணைந்து மணலால் சிவலிங்கம் செய்தனா்.

மணல் லிங்கத்துக்கு பட்டாடைகள், மாலைகள், ருத்ராட்சம் அணிவித்து, வீட்டிலிருந்து கொண்டு வந்த பிரசாதத்தை சுவாமிக்கு படைத்து சிறப்பு வழிபாடு செய்தனா். பின்னா் பக்தா்கள் பலரும் கூட்டம், கூட்டமாக மணலில் அமா்ந்து சிவபுராணம் வாசித்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பாலாற்றில் மணல் லிங்க வழிபாடு காரணமாக ஒரேநாளில் ஏராளமான பக்தா்கள் திரண்டதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com