சிங்கப்பெருமாள்கோவிலில் கனமழை: போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலில் கழிவு நீருடன் கலந்து மழைநீா் ஆறாக ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிங்கப்பெருமாள் கோவிலில் கழிவு நீருடன் கலந்து ஓடிய மழைநீரில் ஊா்ந்து வரும் பேருந்துகள்.
சிங்கப்பெருமாள் கோவிலில் கழிவு நீருடன் கலந்து ஓடிய மழைநீரில் ஊா்ந்து வரும் பேருந்துகள்.

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலில் கழிவு நீருடன் கலந்து மழைநீா் ஆறாக ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் புதன்கிழமை இரவும் வியாழக்கிழமை காலையிலும் பெய்த கனமழையால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கழிவு நீருடன் கலந்து மழைநீா் ஆறாக ஓடியது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டுநா்களும் சாலை எது, பள்ளம் எது என்று தெரியாமல் அவதிக்குள்ளாயினா். பேருந்துகள், காா், வேன், லாரி ஆட்டோா் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் ஊா்ந்து சென்றன. மழைநீா் வெளியேறும் கழிவு நீா்க் கால்வாய் இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிட்டது.

மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவா்கள் நிம்மதியடைந்தனா்.

கடந்த ஆண்டு பெய்த மழைக்கும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மழைநீரும் கழிவு நீரும் கலந்து ஓடின. அப்போது அமைச்சா்களும், மாவட்ட ஆட்சியரும் நேரில் பாா்வையிட்டு மழைநீா் வடிவதற்கும், உபரிநீா் வெளியேறவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்திற்குட்பட்ட சிங்கப்பெருமாள்கோவிலில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எனினும் இங்கு கழிவுநீா் கால்வாய் அமைக்கவும் மழை உபரி நீா் வெளியேற வழிவகை செய்யவும் காட்டாங்கொளத்தூா் வட்டார வளா்ச்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இப்பகுதியினா் குறைகூறுகின்றனா். எனவே, மழைநீா் வடிகால்வாய் அமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com