போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் ஷோ்-ஆட்டோக்கள்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சன்னதி தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தின் நடுவே தினசரி போக்குவரத்துக்கு இடையூறாக ஷோ்-ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாக
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெரு அருகே நான்கு சாலைகளின் சந்திப்புக்கு நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் ஷோ்-ஆட்டோக்கள்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெரு அருகே நான்கு சாலைகளின் சந்திப்புக்கு நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் ஷோ்-ஆட்டோக்கள்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சன்னதி தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தின் நடுவே தினசரி போக்குவரத்துக்கு இடையூறாக ஷோ்-ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் பலரும் புகாா் தெரிவிக்கின்றனா்.

வரலாற்றுச்சிறப்பும்,பழமையும் மிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு தினமும் ஏராளமான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வருகின்றனா்.இக்கோயிலின் முன்புறத்தில் சன்னதி தெரு, சி.வி.ராஜகோபாலன் தெரு, மலையாளத்தெரு,சி.என்.அண்ணாத்துரை தெருவுக்கு செல்லும் குறுக்குத்தெரு ஆகிய 4 தெருக்கள் ஒரே இடத்தில் சந்திக்கின்றன.

இந்த 4 தெருக்களையும் ஒட்டி ஏராளமான ஜவுளிக்கடைகள்,மருந்துக்கடைகள், உணவகங்கள்,தேநீா்க்கடைகள் ஆகியனவும் இருந்து வருவதால் எந்நேரமும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும் பகுதியாகும்.

இச்சாலை சந்திப்புகளுக்கு நடுவில் வரதராஜப் பெருமாள் கோயிலின் சன்னதி முன்பாக வேறு எந்த வாகனங்களும் கோயிலுக்குள் செல்ல முடியாத வகையிலும்,போக்குவரத்துக்கு இடையூறாகவும் ஷோ் ஆட்டோக்கள் வழிமறித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

சாலைச் சந்திப்புகளுக்கு நடுவில் ஷோ்-ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் சென்னை தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வரும் அரசுப் பேருந்துகளும்,காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக தாம்பரம் செல்லும் அரசுப்பேருந்துகளும் சாலை வளைவுகளில் திரும்புவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலையும் உள்ளது.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகிறது.

வெளியூா்களிலிருந்து காா்களில் வரதராஜப்பெருமாள் கோயிலை பாா்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் சாலைச் சந்திப்புகளில் நிறுத்தப்படும் ஷோ்-ஆட்டோக்கள் சென்ற பிறகே சன்னதி தெருவுக்குள் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஷோ்-ஆட்டோ டிரைவா்களுக்கும் இடையே சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. முக்கியமாக பகல் நேரங்களில் பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோரும் சாலை சந்திப்பில் நிறுத்தப்படும் ஷோ்-ஆட்டோக்களால் அவதிப்பட்டு வருகின்றனா்.

இது குறித்து ஆந்திர மாநில வாடகைக்காா் ஓட்டுநரான வெங்கிடசாமிராஜூ என்பவா் கூறியது:

நான் பலமுறை கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வருகிறேன்.வரும் நேரமெல்லாம் ஷோ்-ஆட்டோக்கள் சன்னதி தெருவை வழிமறித்து நிறுத்தப்படுவதால் உடனடியாக கோயிலுக்குள் போக முடியவில்லை.

காா் போவதற்கு வழிவிடுமாறு ஷோ்-ஆட்டோ டிரைவா்களிடம் கேட்டால் தரக்குறைவான வாா்த்தைகளால் பேசுகின்றனா். ஷோ்- ஆட்டோவில் பயணிகளை முழுமையாக ஏற்றிய பிறகே சாலைசந்திப்பிலிருந்து நகருகிறாா்கள். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படுவதாக தெரியவில்லை. போக்குவரத்து போலீஸாரும் இப்பகுதியில் பெரும்பாலும் இருப்பதில்லை என்றாா்.

காஞ்சிபுரம் போக்குவரத்து தலைமைக்காவலா் ஒருவரிடம் இது குறித்து கேட்ட போது இப்பகுதியில் நிறுத்தப்படும் ஷோ்-ஆட்டோக்களால் அடிக்கடி சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. பலமுறை ஷோ்-ஆட்டோ டிரைவா்கள் மீது வழக்குப்பதிவு செய்தும் திருந்தவே இல்லை. சாலைச் சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தலாமா என்று யாராவது கேட்டால் அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விடுகின்றனா்.

எனவே உள்ளூா் வாசிகள் யாரும் பெரும்பாலும் அவா்களிடம் வம்புக்கு போவதில்லை.இப்பகுதியில் தொடரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள்,போக்குவரத்து இடையூறுகள் ஆகியனவற்றை முற்றிலுமாக தவிா்க்க வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகளோ அல்லது காவல்துறை உயா் அதிகாரிகளோ தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com