தொழிலாளி தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

 ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி செய்த  இளைஞர் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது
தொழிலாளி தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்


 ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி செய்த  இளைஞர் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உறவினர்கள் அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் களகாட்டூர் கே.எஸ்.பி.நகர் புதுத்தெரு பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேஷன் மகன் சத்யா(29). 
இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். 
இவர் ஒழுங்காகப் பணிக்கு வரவில்லையெனக் கூறி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தாராம்.
இதனால் மனஉளைச்சலில் இருந்த சத்யா வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சத்யாவின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் மாகறல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
உயிரிழந்த சத்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சத்யாவின் குடும்பத்தினர்,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் அவர் வசித்து வந்த புதுத்தெரு பொதுமக்கள் ஆகியோர் திடீரென அரசு மருத்துவமனை முன்பாக ஒன்று திரண்டு  திடீரென  சாலை  மறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்த சத்யாவிற்கு பிரேமா(26) என்ற மனைவியும் ஜனனி(4)மற்றும் 4 மாத குழந்தையான பிரதிக்ஷா என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
சத்யா முறையாக பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றும் மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்வதாக கூறி வரச்சொல்லி அலைய விட்டு கம்பெனி நிர்வாகம்  பணியில்  சேர்த்துக் கொள்ளவில்லை என்பதால் மனம் உடைந்து  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
எனவே,  இரு பெண் குழந்தைகளை வைத்துள்ள சத்யாவின் மனைவிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை சடலத்தை வாங்க மாட்டோம் எனக்கூறி சாலை மறியல் செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அரசு மருத்துவமனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கலைச் செல்வன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி உ ரிய இழப்பீடு பெற்றுத்தருவதாகவும், இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் உறுதி கூறினர். இத்தகவல் அறிந்த  காஞ்சிபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ.தலைவர் எஸ்.கண்ணன், செயலர் முத்துக்குமார், விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் நேரு ஆகியோரும் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.உரிய இழப்பீடு பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com