பத்து ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான் சிற்பம்

சர்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் சர்வதேச நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட ஆண்டை நினைவுகூறும் வகையில் வெளியிடப்பட்ட 10 ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான்சிற்பங்கள்
1984-இல்  வெளிவந்த 10 ரூபாய்  தாளில் இடம்பெற்றுள்ள மான்  சின்னம். (வலது) மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு சின்னங்களில் பொறிக்கப்பட்டுள்ள மான் சிற்பம்.
1984-இல்  வெளிவந்த 10 ரூபாய்  தாளில் இடம்பெற்றுள்ள மான்  சின்னம். (வலது) மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு சின்னங்களில் பொறிக்கப்பட்டுள்ள மான் சிற்பம்.

சர்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் சர்வதேச நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட ஆண்டை நினைவுகூறும் வகையில் வெளியிடப்பட்ட 10 ரூபாய் தாளில் மாமல்லபுரத்து மான்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. 

மாமல்லபுரத்தில் 7-8-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பல்லவர் ஆட்சியின்போது, கலைகளில் ஆர்வம் கொண்ட இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் தலைசிறந்த சிற்பிகளால் அழியா கல் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மார்கோபோலோ மற்றும் ஐரோப்பிய வணிகர்கள் ஆசியாவுக்கு வந்தபோது மாமல்லபுரம் துறைமுகமாக இருந்தது. கடற்கரைக் கோயிலுக்கு எதிர்புறத்தில் தலசயனபெருமாள் கோயில் பின்புறம் அர்ஜுனன் தபசு சிற்பத் தொகுப்புகள் உள்ளன.

30 மீட்டர் உயரத்தில் 2 மடங்கு நீளம் கொண்ட பாறையில் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. 

இதிலுள்ள சிற்பங்கள் மூன்றடுக்காக அமைந்துள்ளன. மேலிருந்து பார்க்கும்போது முதல்நிலை விண்ணகமாகவும், இரண்டாவது அடுக்கு விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடைப்பட்ட உலகையும், மூன்றாவது அடுக்கில் மண்ணுலகமும் அந்தந்த உலகில் உள்ள மனிதர்களையும், ஜீவராசிகளையும் சித்தரிக்கிறது. 

மகாபாரதத்தில் பாரதப் போரின்போது, வெற்றி பெற பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்காக சிவபெருமானை வேண்டி ஒற்றைக் காலில் தபசு மேற்கொண்டிருக்கும் அர்ஜுனனை சித்தரிப்பதாக உள்ளது. தபசு நிலையில் இருப்பவருக்கு அருகில் பூதகணங்கள் புடைசூழ சிவன் காட்சி தருவதுபோல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பத் தொகுப்பில் ஒருபகுதியாக படுத்து ஓய்வெடுக்கும் நிலையில் ஆண் மானுக்கு அருகில் பெண் மான் இருப்பது போன்ற சிற்பம் உள்ளது.

இதையே 10 ரூபாய் தாளின் பின்பக்கம் யானை, குதிரை , அன்னபட்சி மற்றும் தேசியப் பறவையான மயில் உருவங்களுடன் அமர்ந்த நிலையில் ஆண் மான் மற்றும் பெண் மான் உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த 10 ரூபாய் தாள் அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரா.நா.மல்ஹோத்ராவால் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

1976-ஆம் ஆண்டு இந்திரா காந்தி மாமல்லபுரம் வந்தபோது, பல்லவர்கள் கால சிற்பக்கலைகளைப் பார்வையிட்டார். அர்ஜுனன் தபசை பார்வையிட்டு அதில் பொறிக்கப்பட்டிருந்த சிற்பக் கலைகளை ரசித்துச் சென்றார். 

1984-இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசில் பொறிக்கப்பட்டிருந்த மான் சிலைகள் 10 ரூபாய் தாளில் அச்சிடப்பட்டன. 

மேலும், இந்த அர்ஜுனன் தபசு சிற்ப தொகுப்பின் மற்றொரு சிறப்பம்சம் சிற்ப தொகுப்பு செதுக்கப்பட்டுள்ள பாறையின் நிலமட்டத்தில், அகழியானது அதிக மழை பெய்தாலும் நீர் தேங்காத வகையில் செங்கல், ஜல்லி மற்றும் மணல் ஆகியவற்றால் இரண்டடுக்காக உருவாக்கப்பட்டு, மழைநீர் நிலத்தடி நீரோட்டத்தில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மண் சரிவைத் தடுப்பதற்காக சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 
கன மழையின்போது கூட அர்ஜுனன் தபசு பாறை சிற்பத் தொகுப்பின் ஆழத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்த்து வியக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com