தமிழகம் முழுவதும் தினசரி 65 ஆயிரம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று தொடர்பான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும், சுகாதாரத்துறை செயலருமான ஜெ.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பிள்ளையார் பாளையம்,பல்லவன்நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்ட பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது, தமிழகம் முழுவதும் ஒரு மாவட்டத்துக்கு 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 65 ஆயிரம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருக்கிறதா என பரிசோதனை நடத்தப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகமான மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் மிகவும் தரமான,விலை உயர்ந்த மருந்துகளை கரோனா நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம். இவற்றை சில முகவர்கள் மூலமாக மதுரை,கோயம்புத்தூர்,ஈரோடு ஆகிய ஊர்களில் கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்கள் வந்தன.
இப்புகாரின் அடிப்படையில் அம்முகவர்களைப் பிடிக்க தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஒரு தனியார் மருத்துவமனை மீது புகார் வந்தது. மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர் சிவபாலன் தலைமையில் ஒரு குழு அமைத்து அக்குழு தந்த தகவலின் பேரில் அந்த மருத்துவமனை எக்காரணத்தைக் கொண்டும் கரோனா சிகிச்சையளிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.ராஜ பாளையத்தில் மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவமனையில் போதுமான சிகிச்சையளிக்கப்படாமல் இறந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கி இருக்கிறது.
இந்த நேரத்தில் குறையத் தொடங்கி விட்டதே என முகக்கவசம் அணியாமல் அஜாக்கிரதையாக இருந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் இன்னும் முக்கவசம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். கிராமங்களில் இன்றும் இடுப்பில் முகக்கவசத்தை சொருகி வைத்துக் கொண்டு போவதை பார்க்க முடிகிறது. தலைக்கவசத்தை யார் அணிந்திருக்கிறாரோ அவரின் உயிரை மட்டுமே அது காப்பாற்றும்.ஆனால் முகக்கவசம் அதை அணிந்திருப்பவரையும்,மனித சமுதாயத்தையும் காப்பாற்றும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். போதுமான தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். கரோனா பாதிப்பு அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே மருத்துவமனைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்து விட வேண்டும்.
தாமதமாக வரும்போது சிகிச்சையளிப்பதும் கடினமானதாகி விடுகிறது. ரத்த அழுத்த நோய்,சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள்,உடல் பருமனாக இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமாகும். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்வது பெரும்பாலும் அவசியமில்லை எனவும் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பேட்டியின் போது காஞ்சிபுரம் ஆட்சியர் பா.பொன்னையா,சார் ஆட்சியர் எஸ்.சரவணன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜீவா,துணை இயக்குநர் வி.கே.பழனி,அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ரா.கல்பனா,நகராட்சி ஆணையாளர் ரா.மகேசுவரி உள்பட அரசு மருத்துவர்கள் பலரும் உடன் இருந்தனர்.