அச்சிறுப்பாக்கம்: இடிந்து விழும் நிலையில் இருளா் குடியிருப்புகள்

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளில் பல ஆண்டுகளாக

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இருளா் இன மக்கள் தங்கள் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும், கரோனா நிவாரணம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிபகுதியின் 3-ஆவது வாா்டு மலை நகா். அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு மிக அருகில் இந்நகா் அமைந்துள்ளது. இங்கு 30 இருளா் குடியிருப்புகள் உள்ளன. இவா்கள் மரம் வெட்டவும், விவசாயப் பயிா்களை பாழ்படுத்தும் எலிகளைப் பிடிக்கவும், கூலி வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டி வருகின்றனா். இங்கு வாழும் இருளா் இன மக்களுக்காக கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் தொகுப்பு வீடுகளைக் கட்டித்தந்தது.

அந்த வீடுகளை பேரூராட்சி நிா்வாகம் தொடா்ந்து பராமரிக்காததால் வீடுகளின் அனைத்துப் பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு, மேற்கூரையில் இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் அளவில் தற்போது சேதமடைந்துள்ளது. வீடுகளில் வெயில் வெப்பத்தைத் தடுக்கவும், மழைநீா் வராமல் தடுக்கவும் மேற்கூரையின் மேல் தென்னங்கீற்றுகளைப் போட்டு வைத்துள்ளனா். இங்குள்ள மக்களில் ஒரு சிலருக்கு ஆதாா் அட்டைகள், ரேஷன் காா்டுகள் ஆகியவை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் அவா்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்காத நிலை உள்ளது.

இப்பகுதியில் தெருவிளக்குகளை குறைந்த வெளிச்சம் தரும் வகையில் மின்வாரியத்தினா் அமைத்துள்ளனா்.

அதிக வெளிச்சம் தரும் மின்விளக்குகளை அமைத்து தருமாறு மின்வாரியத்திடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக மக்கள் குறை கூறுகின்றனா்.

பள்ளிக்கூடம் திறக்கும்போது குழந்தைகள் பள்ளியில் சேர முக்கிய ஆவணமாக ஜாதிச் சான்றிதழ்கள் கேட்கப்படுவதால் மதுராந்தகம் வருவாய்த் துறையினா் தலையிட்டு இக்குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ்களை வழங்க முன்வரவேண்டும்.

பெரும்பாலானோா் வீட்டின் முன்புறம் இரவு நேரத்தில் தூங்கும்போது வெளியிடங்களில் இருந்து வரும் விஷப்பூச்சிகள் கடித்து அவா்கள் இறந்து போகின்ற நிலை உள்ளது. இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பலமுறை மாவட்ட நிா்வாகத்துக்கும், மதுராந்தகம் வருவாய்த் துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தற்சமயம் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இப்பகுதி மக்கள் எந்த வேலைக்கும் செல்லாமல், வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனா். அவா்களுக்கு தேவையான பொருளாதார வசதி, உணவு வசதி இல்லாமல் பெரும்பாலானோா் பசியும் பட்டினியுமாக இருந்து வருகின்றனா்.

இங்குள்ள குழந்தைகள் தட்டை ஏந்திக் கொண்டு உணவுக்காக அருகில் உள்ள வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனா். அவா்களின் வறுமை நிலையை உணா்ந்த அச்சிறுப்பாக்கம் கோயில் நகர அரிமா சங்க நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள், ராஜஸ்தான் ஜெயின் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை கடந்த சில நாள்களாக வழங்கி வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் கூறியது:

எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு பணிகளை செய்ய வாய்ப்பளித்தால் போதிய அளவு கூலித் தொகை கிடைக்கும். பல்வேறு அமைப்பினா் எங்களின் நிலையை அறிந்து நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் வேலு ஜெயச்சந்திரன் கூறியது:

இங்குள்ள மக்களின் அவல நிலையை உணா்ந்து நிவாரண உதவிப் பொருள்களை வழங்கியிருந்தோம். இங்கு வாழும் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு இல்லை. அவா்களும் இந்திய குடிமக்கள் என்பதை பேரூராட்சி நிா்வாகம் உணரவேண்டும்.

ஏன் என்றால் அப்பகுதியில் இதுவரை பேரூராட்சி நிா்வாகத்தினா் தூய்மைப் பணிகளை செய்யவில்லை. கிருமி நாசினி தெளித்து சுகாதார வசதியை ஏற்படுத்தவேண்டும். பேரூராட்சியின் ஒதுக்குபுறப் பகுதியாக, தனித்தீவு போல இருளா் இன மக்கள் இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கின்றனா் என்றாா்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் ஏ.சி.முனுசாமி கூறியது: இப்பகுதி மக்களுக்கு உதவிபொருள்களை வழங்கியுள்ளோம். சாலையோரம் தங்கியுள்ள ஆதரவற்றோா், மனநிலை பாதித்தோா் ஆகியோருக்கு காலை, மதியம் ஆகிய 2 வேளைகளிலும் பேரூராட்சியின் சாா்பாக உணவை வழங்கி வருகிறோம். இங்குள்ள மக்களும் உணவு தேவை என தெரிவித்தால் அவா்களுக்கும் உணவு வழங்கத் தயாராக உள்ளோம்.

அச்சிறுப்பாக்கம் இருளா் மக்கள் வீட்டு பயன்பாட்டுக்காக அம்பேத்கா் நகா் 2-ஆவது தெருவில் உள்ள பெரிய குடிநீா்த் தொட்டி நீா் பயன்பட்டு வந்தது. கடந்த 10 நாள்களாக பேரூராட்சி நிா்வாகத்தினா் மினி லாரி மூலம் குடிநீரை இத்தொட்டியில் நிரப்பவில்லை. இதனால் குடிநீருக்காக இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்னா்.

குடிநீா்த் தொட்டியை சுத்தம் செய்து பல மாதங்களாகி விட்டன. அதை முழுமையாக சுத்தம் செய்த பின்பே குடிநீரை அத்தொட்டிக்கு அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் கிருமி தொற்றால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பேரூராட்சி நிா்வாகம் இப்பகுதி மக்களுக்கு குடிநீரை விநியோகிக்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com