ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயிலில் ‘நித்ய பரமபத வாசல்’ திறப்பு
By DIN | Published On : 25th December 2020 11:13 PM | Last Updated : 25th December 2020 11:13 PM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொன்மையான ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி (ராமாநுஜா்) கோயிலில் ‘நித்ய பரமபத வாசல்’ வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
ராமாநுஜரின் அவதாரத் தலத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. எனவே, ராமாநுஜரை வணங்குவதாலேயே மோட்சத்துக்குச் செல்ல முடியும் என்ற ஐதீகம் காரணமாக, இக்கோயிலில் வழக்கமான பரமபத வாசல் திறக்கும் நிகழ்வு நடைபெறுவதில்லை. அதற்குப் பதிலாக ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி நாளில் ‘நித்ய பரமபத வாசல்’ திறக்கப்படுகிறது.
இதன்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு இக்கோயில் நடை திறக்கப்பட்டு, ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமிக்கு நித்ய ஆராதனைகள் நடத்தப்பட்டன.
அதன் பிறகு மணிக்கதவு வழியாக சுவாமி உள்புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, கோயிலின் தங்க மண்டபத்தில் உற்சவா் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ராமாநுஜா் (உற்சவா்) எழுந்தருளினா். இந்த வழிபாட்டில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு முந்தைய பத்து நாள்கள் ‘பகல் பத்து’ நிகழ்வும், விழாவுக்குப் பிந்தைய பத்து நாள்கள் ‘ராப்பத்து’ நிகழ்வும் நடைபெறுவது வழக்கம். ராப்பத்து நாள்களில் மதிய வேளையில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடப்பட்டு, சுவாமி உள்புறப்பாடும், ஆழ்வாா்கள் மற்றும் ஆச்சாரியா்களுக்கு உற்சவமும் நடைபெறும்.
அடுத்ததாக, வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சனிக்கிழமை, ஆதிகேசவப் பெருமாள், ரங்கநாதா் கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.
மற்ற கோயில்கள் வழிபாடு: இதனிடையே, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகான்யம் பகுதியில் உள்ள கல்யாண சீனிவாசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
இதையடுத்து, சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பகதா்களுக்கு காட்சியளித்தாா். அதன் பின், வேத பாராயணம், தமிழ்ப் பிரபந்தங்கள் ஓதியபடி வேத விற்பன்னா்கள் வர, உற்சவா் புறப்பாடு நடைபெற்றது. இறுதியாக, பரமபத வாசலை சீனிவாசப் பெருமாள் அடைந்தாா். காலை 6 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாள் தரிசனம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், மஹாரண்யம் முரளிதர சுவாமிகள் மற்றும் பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை பம்மல் பாலாஜி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.