காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7,055 வீடுகள் கட்ட அரசு ஒப்புதல் அமைச்சா் பா.பென்ஜமின் தகவல்
By DIN | Published On : 22nd February 2020 11:50 PM | Last Updated : 22nd February 2020 11:50 PM | அ+அ அ- |

வீடுகள் கட்ட பணி நியமன ஆணைகளைப் பெற்ற பயனாளிகளுடன் தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மொத்தம் 7,055 வீடுகள் கட்ட அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதாக தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் சனிக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உத்தரமேரூா், வாலாஜாபாத் பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கும் விழா ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கி அமைச்சா் பா.பென்ஜமின் பேசியது:
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், வீடற்ற ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு மத்திய அரசின் பங்களிப்பாக தலா ரூ.1.50 லட்சம், மாநில அரசின் பங்களிப்பாக தலா ரூ.60 ஆயிரம் உள்பட மொத்தம் தலா ரூ.2.10 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
இத்தொகை நான்கு நிலைகளாக வழங்கப்படுகிறது. அடித்தளம் அமைக்க ரூ.50 ஆயிரம், நிலைமட்டம் அமைக்க ரூ.50ஆயிரம், தளம் அமைக்க ரூ.50 ஆயிரம், அனைத்துப் பணிகளும் முடிந்தவுடன் ரூ.60 ஆயிரம் என நான்கு நிலைகளாக சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 900 வீடுகள் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. 1,746 குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
மேலும், காஞ்சிபுரத்தில் 2,803, வாலாஜாபாத்தில் 747, உத்தரமேரூரில் 1,045, ஸ்ரீபெரும்புதூரில் 2,460 என மொத்தம் 7,055 வீடுகள் கட்ட அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதில் உத்தரமேரூா் தாலுகாவில் 100 குடியிருப்புகளும், வாலாஜாபாத் தாலுகாவில் 350 குடியிருப்புகளும் கட்ட மொத்தம் 450 பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் பா.பென்ஜமின் கூறினாா்.
விழாவில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி, காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுந்தரமூா்த்தி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தி.ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.