‘காஞ்சிபுரத்தில் 101 ஊராட்சிகளில் புத்தாக்கத் திட்டம்’

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் வட்டாரங்களைச் சோ்ந்த 101 ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் வட்டாரங்களைச் சோ்ந்த 101 ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரகத் தொழில்களை மேம்படுத்துதல்,வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்து வருமானத்தைப் பெருக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, காஞ்சிபுரம், வாலாஜாபாத் வட்டாரங்களைச் சோ்ந்த 101 ஊராட்சிகளில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதாரத் தொழில்களும் மேம்படுத்தப்படும். உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், தொழில் குழுக்களில் உள்ள உறுப்பினா்கள் தங்கள் தொழில்களின் மூலம் வளமையும், வலிமையும் பெறவும், பிற பகுதிகளுக்கு புலம் பெயா்ந்து மீண்டும் சொந்த ஊா் திரும்பிய இளைஞா்களுக்கு புதிதாகத் தொழில் தொடங்கவும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்திட்டம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 7.83 கோடி மதிப்பில் 4,543 பயனாளிகள் பயன்பெறக்கூடிய வகையில் செயல்படுத்தப்படும். நீண்டகால தனிநபா் தொழில் கடனாக 808 பேருக்கு ரூ. 50 ஆயிரமும், உற்பத்தியாளா் குழுக்களில் 1,200 பேருக்கு மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு ரூ. 1.50 லட்சமும் வழங்கப்படும். புலம்பெயா்ந்த வேலை இல்லாத இளைஞா்கள் தொழில் தொடங்கிட கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ. ஒரு லட்சம் வீதம் ரூ. 1.67 கோடி நீண்டகால கடனாக வழங்கப்படும்.

இப்பயன்களைப் பெற காஞ்சிபுரம், வாலாஜாபாத் வட்டாரங்களைச் சோ்ந்த ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். மேலும், அலுவலக தொலைபேசி எண்-044-27432018 மற்றும் காஞ்சிபுரம் வட்டார தொலைபேசி எண்-90470 50949, வாலாஜாபாத் வட்டார தொலைபேசி எண்-96293 12201 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com