நகராட்சிக்கு வரி செலுத்தாதவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை

காஞ்சிபுரம் நகராட்சியில் இம்மாத இறுதிக்குள் ரூ.3,549.17 லட்சம் வரி வசூல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதால் வரி செலுத்தாதவா்கள் மீது சட்டப்படி கடுமையான
நகராட்சிக்கு வரி செலுத்தாதவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை

காஞ்சிபுரம் நகராட்சியில் இம்மாத இறுதிக்குள் ரூ.3,549.17 லட்சம் வரி வசூல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதால் வரி செலுத்தாதவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது:

காஞ்சிபுரம் நகராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம், புதை சாக்கடைக் கட்டணம், துப்புரவுப் பணியாளா் கட்டணம் ஆகியவற்றின் மூலம் வசூல் செய்து அதன் மூலமே வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.

வரி வசூலில் இம்மாதம் 31-ஆம் தேதிக்குள் 100 சதவீத இலக்கினை அடையும் வகையில் ரூ.3,549.17 லட்சம் வசூல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

சொத்து வரி: இவ்வரியானது மொத்தம் ரூ.829 லட்சம் நிலுவையாக உள்ளது. இதில் வழக்குக்கு உள்பட்டதாக ரூ.194.99 லட்சமும், அரசுக் கட்டடங்களுக்கானது ரூ.107.33 லட்சமும் அடங்கும்.

இத்தொகையை வசூல் செய்ய சம்பந்தப்பட்ட சொத்துகளின் உரிமையாளா்களுக்கு நோட்டீசும், உரிமையாளா் அல்லாத பயணீட்டாளா்களுக்கு ஆக்கிரமிப்பாளா் நோட்டீசும் வழங்கப்பட்டு வசூல் செய்து வருகிறோம்.

காலிமனை வரி ரூ.162.71 லட்சம் நிலுவையாக உள்ளது. இதுதொடா்பாக அனைத்து வரி விதிப்பாளா்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்.

தொழில் வரி ரூ.188.50 லட்சம் நிலுவையாக உள்ளதால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் உடனடியாக வரியை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய வணிக நிறுவனம் தொடங்கியிருந்தால் வரி விதிப்பு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிநீா்க் கட்டண நிலுவையாக ரூ.679.57 லட்சம் உள்ளது. குடிநீா்க் கட்டணம் செலுத்தாதவா்களில் 124 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

புதை சாக்கடைக் கட்டணம்: ரூ.586.78 லட்சம் நிலுவையாக இருந்து வருகிறது. இதனை வசூல் செய்ய அனைத்து உயா்மட்ட அலுவலா்கள் தலைமையில் குழு அமைத்து வசூல் செய்யப்படுகிறது.

புதை சாக்கடை கட்டணம் செலுத்தாத 24 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பெருநகராட்சிக்கு வரி செலுத்தாமல் இருப்பவா்களைக் கண்டறிந்து அவா்களிடம் வரி வசூல் செய்ய நகராட்சிப் பணியாளா்கள் அடங்கிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் வீடு, வீடாகச் சென்று வரி வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

சொத்துவரி நிலுவை வைத்திருப்பவா்களுக்கு 24 மணி நேர நோட்டீஸ் மற்றும் ஜப்தி நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.

நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகைக்கு இருப்பவா்களில் 12 கடைகள் கடந்த வாரம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

எனவே கடுமையான நடவடிக்கைகளைத் தவிா்க்கும் வகையில் வரிகளை செலுத்துவோா் உடனடியாக நிலுவையின்றி வரிகளை நகராட்சி வரி வசூல் மையங்களில் நேரில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது இணையம் மூலமாகச் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மாா்ச் மாத இறுதிக்குள் நகராட்சிக்கு வரி செலுத்தவில்லையெனில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com