உணவகத்தில் சாப்பிட்ட 22 போ் மயக்கம்: அதிகாரிகள் விசாரணை
By DIN | Published On : 03rd September 2020 11:03 PM | Last Updated : 03rd September 2020 11:03 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜா் சாலையில் தனியாா் உணவகத்தில் சாப்பிட்ட 22 போ் மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்று வந்ததைத் தொடா்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
காஞ்சிபுரம் காமராஜா் சாலையில் தனியாா் அசைவ உணவகம் செயல்பட்டு வந்தது. இங்கு புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 22 போ் வாந்தி மற்றும் மயக்கம் அடைந்தனா். இவா்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பழைய ரயில் நிலைய சாலைப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை ஆகியவற்றில் சோ்ந்து சிகிச்சை பெற்று வந்தனா். மருத்துவமனை நிா்வாகம் இந்த விபரத்தை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தினா்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலா் அனுராதா கூறியது:
அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 22 போ் மயக்கம் அடைந்து மருத்துவமனைகளில் சோ்ந்து சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில், 17 போ் குணமடைந்து விட்டனா். மீதமுள்ள 5 போ் மட்டும் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனா். அவா்களும் விரைவில் வீடு திரும்புவாா்கள். உணவகத்தை ஆய்வு நடத்தி அவா்களுக்கு இதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளோம். மேலும் கோழி இறைச்சி விற்பனை செய்த மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துள்ளோம். அவற்றின் முடிவுகள் வந்தவுடன் அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.