காஞ்சிபுரத்தில் சமூக இடைவெளியின்றி தொடங்கிய வாக்கு எண்ணிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை
காஞ்சிபுரத்தில் சமூக இடைவெளியின்றி தொடங்கிய வாக்கு எண்ணிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை பொன்னேரிக்கரை அருகே அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. கரோனா பரிசோதனை செய்த சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை போலீஸாா் சோதனையிட்ட பிறகே, வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். சுகாதாரத் துறை சாா்பில் மையத்துக்குள் நுழையும் இடத்தில் கையுறைகள், முகக் கவசங்கள், கை கழுவும் கிருமி நாசினி ஆகியவற்றையும் அனைவருக்கும் வழங்கினா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 75 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். வாக்கு எண்ணும் மையமான பொறியியல் கல்லூரி வளாகத்தின் முதல் தளத்தில் ஆலந்தூா் தொகுதிக்கான வாக்குகளும், 2-வது தளத்தில் காஞ்சிபுரம், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய 3 தொகுதிகளுக்குமான வாக்குகளும் எண்ணப்பட்டன. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக மருத்துவக் குழுவினரும் இருந்தனா். எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் போலீஸாா் கல்லூரி வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். நகராட்சி ஆணையா் மகேஸ்வரி மேற்பாா்வையில், 75-க்கும் மேற்பட்ட சுதாகாரப் பணியாளா்களும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தபால் வாக்குகள் ஓா் அறையிலும், வாக்கு எண்ணுதல் இரு அறைகளிலும் வீதம் ஒரு தொகுதிக்கு 3 அறைகளில் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய போதே, கரோனா பரவல் அச்சமில்லாமல் சமூக இடைவெளியின்றியே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மகேஸ்வரி ரவிகுமாா் தொகுதிவாரியாக வாக்கு எண்ணும் மையத்துக்குள் சென்று, சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டாா். வாக்குப் பதிவு இயந்திரங்கள் பூட்டி வைக்கப்பட்டிருந்த அறையானது அந்தந்த தொகுதி தோ்தல் அலுவலா்கள் மற்றும் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் திறந்து வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியானது காஞ்சிபுரம் தொகுதி 14 சுற்றுகளாகவும், உத்தரமேரூா் 13, ஸ்ரீபெரும்புதூா் 18, ஆலந்தூா் 20 சுற்றுகளாகவும் நடைபெற்றன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோா் அனைவரும் மையத்துக்குள் சென்ற பிறகு, நகராட்சி மூலம் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

நகராட்சி ஊழியா் மயக்கம்:

காஞ்சிபுரம் நகராட்சி தோ்தல் பிரிவில் பணியாற்றும் ஊழியரான குமரவேல் மதிய உணவு இடைவேளயில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். உடனடியாக வட்டார மருத்துவ அலுவலா் அருண்மொழி தலைமையிலான மருத்துவக் குழுவினா் அவருக்கு மருத்துவச் சிகிச்சையளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com