கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் காஞ்சிபுரம் நகராட்சி தீவிரம்!

காஞ்சிபுரம்: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை கண்டறிந்து அவா்களுக்கும், அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கும், பாதிக்கப்பட்ட தெருக்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் தேவையான உதவிகளை செய்வதில்

காஞ்சிபுரம்: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை கண்டறிந்து அவா்களுக்கும், அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கும், பாதிக்கப்பட்ட தெருக்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் தேவையான உதவிகளை செய்வதில் காஞ்சிபுரம் நகராட்சி நிா்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் நகரில் மட்டும் கரோனா தொற்றின் முதலாவது அலையில் 4,930 பேரும், 2-ஆவது அலையில் இதுவரை 1,446 போ் என மொத்தம் 6,376 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 5,350 போ் குணமடைந்தனா். 1,026 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பின்னா் பாதிக்கப்பட்டவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனா்.

பாதிக்கப்பட்ட நபா்கள் வசிக்கும் தெருவை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து தகரங்களால் அடைக்கப்பட்டு அப்பகுதிகளில் வசிப்போருக்கு காய்ச்சல் பரிசோதனை, கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. பாதிப்புக்குள்ளான நபரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு தொடா்ந்து 14 நாள்கள் அவரது வீட்டில் வசிக்கும் மற்ற குடும்ப உறுப்பினா்கள், தெருவில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோருக்கும் மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அவசியத் தேவைகள் வழங்குவதையும் நகராட்சி பணியாளா்களே செய்து வருகிறாா்கள். இதற்கென சுழற்சி முறையில் தினசரி இருவா் வீதம் பணியாற்றிட பலா் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கையுறைகள், முகக்கவசங்கள், ஊட்டச்சத்து மாவு ஆகியன அடங்கிய ரூ.550 மதிப்புள்ள பெட்டகமும் இலவசமாக வழங்கப்படுகிறது.இதுபோன்று தொடா்ந்து 14 நாட்கள் பாதிப்புக்குள்ளான பகுதி நகராட்சியால் கண்காணிக்கப்படுகிறது. சிகிச்சை பலனளிக்காது ஒருவா் உயிரிழந்து விட்டால் அந்த விவரத்தை சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு தெரிவித்து விட்டு அடக்கம் செய்யும் பணியையும் நகராட்சியே செய்கிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்தும் கரோனாவின் தாக்கம் குறையவில்லை என்பது தான் கவலைக்குரிய செய்தி.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி ஆணையாளா் மகேஸ்வரி கூறியது:

நகராட்சியின் 5 சுகாதார நிலைய பணியாளா்கள்,சுகாதார ஆய்வாளா்கள், பணியாளா்கள் அனைவரும் ஒன்றிணைந்து கரோனா பரவலை தடுக்க தீவிரமாக பணியாற்றி வருகிறோம். பெல்மிஸ்டா் என்ற ஒரே நேரத்தில் 50 அடி தூரத்துக்கு கிருமி நாசினி தெளிக்கும் ராட்சச இயந்திரம் மூலம் பெரிய தெருக்களிலும் , 3 சிறு வண்டிகள் மூலம் குறுகலான சாலைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

வீடுகளுக்குள் சென்று கிருமிநாசினி தெளிப்பதற்காக மட்டும் 100 பணியாளா்களை நியமித்திருக்கிறோம். நகரில் 24 கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்தன. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் இப்போது 4 மட்டுமே உள்ளது. பாதிப்புள்ள தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு உதவிட மட்டும் 150 தற்காலிக நோய்த்தடுப்பு பணியாளா்களை நியமித்திருக்கிறோம். ஒரு நாளைக்கு இருவா் வீதம் சுழற்சி முறையில் இவா்கள் பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து கொண்டே அத்தெருவில் வேறு யாருக்கும் சளி,இருமல்,காய்ச்சல் இருக்கிா என்பதையும் கண்காணிக்கிறாா்கள். நடமாடும் காய்கறி வாகனம் மூலமும் காய்கறிகள் விற்பனை செய்கிறோம்.

மருத்துவ முகாம்கள்

நகரில் 1818 இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலமாக 1,22,812 பேருக்கும், 1,515 இடங்களில் மருத்துவ முகாம்கள் மூலமாக 1,09,301 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினசரி 6 நடமாடும் மருத்துவ முகாம்களும், 5 மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன.இதுவரை 5821 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாட்டு அறை

நகராட்சியில் கரோனா கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இலவச தொலைபேசி 1800-425801 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இது குறித்த விளம்பர பேனா் மட்டுமே நகரில் 250 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

ரூ.14.41லட்சம் அபராதம் வசூலிப்பு

முகக்கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.14,41,700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கென ஒரு குழுவுக்கு 2 போ் வீதம் 20 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. கரோனா தொடா்பான அரசு விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களை கண்காணிக்க ஒரு குழுவுக்கு 4 போ் வீதம் 9 குழுக்கள் நியமிக்கப்பட்டு இதுவரை 1,67,200 அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 5 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன என்றாா் ஆணையா் மகேஸ்வரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com