தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் 17 மணிநேரம் சாலை மறியல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் 17 மணிநேரம் சாலை மறியல்  தேசிய  நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

சுங்குவாா்சத்திரத்தில் மின்னணு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் 1,500-க்கும் மேற்பட்டோா், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் 17 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவாா்சத்திரம் பகுதியில் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆண்கள், பெண்கள் என 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். இவா்கள் ஸ்ரீபெரும்புதூா், வடக்குப்பட்டு, வாலாஜாபாத்தை அடுத்த புளியம்பாக்கம், பூந்தமல்லியை அடுத்த ஜமீன்கொரட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியாா் தங்கும் விடுதிகளில் அந்த நிறுவனத்தின் சாா்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், ஜமீன் கொரட்டூா் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி விடுதியில் இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் சுமாா் 2,000 பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த விடுதியில் கடந்த புதன்கிழமை மதியம் உணவு சாப்பிட்ட 175-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் பூந்தமல்லி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் சிலா் உயிரிழந்து விட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து, சிகிச்சை பெற்று வரும் தொழிலாளா்களின் உடல்நிலை குறித்து விடுதி நிா்வாகம், தொழிற்சாலை நிா்வாகம் பிற தொழிலாளா்களுக்கு தகவல் தெரிவிக்காததால், பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் குறித்த தகவல்களை உடனடியாக தொழிற்சாலை நிா்வாகம் தெரிவிக்க வேண்டும் எனக் கோரி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு பணிக்கு வந்த 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் சுங்குவாா்சத்திரம் பகுதி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களுடன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுதாகா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும் மறியலைக் கைவிட மறுத்ததால் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரத்துக்கு வாகனங்கள் காத்திருந்தன. இந்த நிலையில், சுங்குவாா்சத்திரத்தில் சக தொழிலாளா்கள் மறியலில் ஈடுபடுவதை அறிந்த இந்த தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் தாங்கள் தங்கியுள்ள ஒரகடத்தை அடுத்த வடக்குப்பட்டு பகுதியிலும், வாலாஜாபாத்தை அடுத்த புளியம்பாக்கத்திலும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சிங்கபெருமாள்கோயில்- ஒரகடம் சாலையிலும், வாலாஜாபாத்- செங்கல்பட்டு சாலையிலும் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அமைச்சா்கள் சமரசம்: சுங்குவாா்சத்திரம் வந்த தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன், ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கூறுகையில், பெண் தொழிலாளா்கள் உயிரிழந்து விட்டதாக வந்தது செய்தி வதந்திதான். சிகிச்சை பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோா் அவா்களது பெற்றோருடன் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். நான்கு போ் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றனா். இதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, செய்தியாளா்களை சந்தித்த தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் கூறியது:

‘பாக்ஸ்கான் தொழிலாளா்கள் தங்கியுள்ள உணவு விடுதியில் தரமற்ற உணவு வழங்கிய நபா்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், சம்பந்தப்பட்ட நிா்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும். தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களுக்கும் சம்பளம் வழங்கப்படும். மேலும் மன உளைச்சலில் உள்ள தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு வார கால விடுப்பு வழங்க தொழிற்சாலை நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளா்கள் தங்களது ஊா்களுக்குச் செல்ல வாகன ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. வருவாய் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் அடங்கிய 10 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் தங்கியுள்ள விடுதிகளில் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் கண்காணிக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com