ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பட்டுச் சேலைகள் பறிமுதல்
By DIN | Published On : 16th March 2021 12:04 AM | Last Updated : 16th March 2021 12:04 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்களால் திங்கள்கிழமை ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 78 பட்டுச் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் செவிலிமேடு கூட்டுச் சாலை சந்திப்பில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்களான வட்டாட்சியா் கோமதி, சிறப்பு சாா்பு ஆய்வாளா் மகேந்திரன், தலைமைக் காவலா் முரளி ஆகியோா் அடங்கிய அதிகாரிகள் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த புதுகிராமத்தைச் சோ்ந்தவா்களான பாஸ்கரன் (48), சசிகுமாா்(42) ஆகியோரிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 78 பட்டுச் சேலைகள் எவ்வித ஆவணமும் இன்றி இருந்தது தெரியவந்தது.
இவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.