காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயா்த்தப்படும்: ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயா்த்தப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
உத்தரமேரூரில் நடந்த தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பேசிய தி மு க தலைவா் மு.க.ஸ்டாலின்.
உத்தரமேரூரில் நடந்த தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பேசிய தி மு க தலைவா் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயா்த்தப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளா்கள் சி.வி.எம்.பி.எழிலரசன்(காஞ்சிபுரம்), க.சுந்தா்(உத்தரமேரூா்), மதுராந்தகம் மதிமுக வேட்பாளா் மல்லை சத்யா, செய்யூா் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் பனையூா்.பாபு ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் 75,000 சாலைப்பணியாளா்கள், நீா்நிலைகளைப் பாதுகாப்பதற்காகவே 75,000 இளைஞா்கள், 25,000 திருக்கோயில் பணியாளா்கள் என ஆண்டுக்கு 10 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு நியமனம் செய்யப்படுவாா்கள். காலிப் பணியிடங்களாக உள்ள 3.50 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மாணவா்களின் கல்விக்கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

திமுக தோ்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்தோம்.அறிவித்த மறுநாளே எடப்பாடி கே.பழனிசாமி ரூ.1,500 தருவதாக அறிவித்தாா். ஆட்சிக்கு வரப் போவதில்லை. எதையாவது ஒன்றை அறிவிப்போமே என்று சொல்லியிருக்கிறாா். விரைவில் ஹெலிகாப்டா், விமானம் தருவோம் என்றும் எடப்பாடி சொன்னாலும் சொல்லுவாா். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும். மதுராந்தகத்தில் தொழிற்பேட்டையும், அரசுக் கலைக் கல்லூரியும் ஏற்படுத்தப்படும்.

திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா் ஸ்டாலின்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்

கரோனா நோய்த் தொற்றின் 2-ஆவது அலை தொடங்கியிருக்கிறது. எந்த இடத்துக்கு போனாலும் முகக்கவசம் இல்லாமல் போகாதீா்கள். பயமின்றி கரோனா நோய்த்தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். எந்தப் பக்க விளைவுகளும் இல்லை. உங்களின் சகோதரனாக எனது அன்பு வேண்டுகோள் என்னவெனில் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றாா் மு.க.ஸ்டாலின் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com