காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்

 ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில்  புதன்கிழமை முதல்கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்றது.

காஞ்சிபுரம்:  ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில்  புதன்கிழமை முதல்கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், உத்தரமேரூர்,  காஞ்சிபுரம் ஆகிய 3 ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக  உள்ளாட்சித் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.  
முதல்கட்ட தேர்தலில் மாவட்டத்தில் மொத்தம் 680 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 
உள்ளாவூரில் 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்:  வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் தனசேகரன் மனைவி த.லெட்சுமி என்பவர் உட்பட 4 பேர் போட்டியிட்டனர்.  வாக்குச்சாவடி மையச் சுவரொட்டியில் த.லெட்சுமி என்பதற்கு பதிலாக தனலெட்சுமி என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் வாக்களிக்க வந்தவர்கள் குழப்பமாக இருப்பதாகக் கூறி, வாக்களிக்காமல் திரும்பிச் சென்றனர். இதன் காரணமாக 3 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர், அதிகாரிகள் வந்து சுவரொட்டியில் த.லெட்சுமி என மாற்றி எழுதி ஒட்டியதைத் தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
கள்ள வாக்கு பதிவு செய்ததாகப் புகார்: காஞ்சிபுரம் அருகே சிங்காடிவாக்கம் ஊராட்சியில் பெண் ஒருவர் வாக்களிக்க வந்தார். அப்போது அவரது வாக்கை ஏற்கெனவே  ஒருவர் செலுத்தியிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில், அப்பெண் ரூ. 2 கட்டணமாக செலுத்தி அதற்குரிய படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுத்து அதன் பின்னரே வாக்களித்துள்ளார். இது குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு  வட்டாட்சியர் காமாட்சி கேட்டுள்ளார்.
வாக்குப் பதிவு நேரம் முடிந்தும் வாக்களித்த வாக்காளர்கள்: சிறுகாவேரிப்பாக்கத்தில் வாக்குப் பதிவு நேரம் 6 மணிக்கு நிறைவு பெற்ற போதும், வாக்காளர்கள் பலரும் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில், வாக்குச்சாவடி அலுவலர் வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து அதன் பின்னர் அனைவரும் வாக்களிக்க ஏற்பாடு செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்,  காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் ஆகியோர் பல வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com