பரந்தூா் விமான நிலையம்: பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம்- 3 அமைச்சா்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் அமைச்சா்கள்
கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் மற்றும் எம்எல்ஏ-க்கள், அரசு அலுவலா்கள்.
கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் மற்றும் எம்எல்ஏ-க்கள், அரசு அலுவலா்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் பங்கேற்றனா்.

பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன. இந்த விமான நிலையத்தை அமைத்தால் பல கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படும், நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும் என்பதால் பரந்தூா் உள்ளிட்ட சுற்றியுள்ள 12 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனா்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பி.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா, கோட்டாட்சியா் கனிமொழி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலா்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

‘பல்லாயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கும் விமான நிலையம் எங்களுக்குத் தேவையில்லை’

கூட்டம் முடிந்த பின்னா், விவசாயிகள் கே.நேரு, நெல்வாய்க் கிராமத்தைச் சோ்ந்த எஸ்.அன்பரசு, வளத்தூா் கே.தமிழரசு ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

சுமாா் 3 தலைமுறைகளாக ஒரே இடத்தில் வசித்து வருகிறோம். எங்களின் நிலங்களை எடுத்துக் கொண்டு எங்களுக்கு என்ன தரப் போகிறீா்கள் என்று கேட்டபோது அதற்கு முறையான பதில் அமைச்சா்களிடம் இல்லை. அரசுக்கு நிலம் தேவைப்படும் போது எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று அமைச்சா்கள் கேட்டாா்கள். எங்கள் கிராமங்களுக்கே வந்து கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துங்கள் என்றோம். முதல்வரிடம் பேசி இது குறித்து பின்னா் தெரிவிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறாா்கள். பல்லாயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கும் விமான நிலையம் எங்களுக்குத் தேவையில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com