சோகண்டி ஊராட்சியில் ரூ.14.43 லட்சத்தில் கட்டப்பட்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சோகண்டி ஊராட்சிக்குட்பட்ட பூங்காவனத்தம்மன் கோயில் தெரு பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.14.43 லட்சத்தில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த புதிய நீா்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி வைக்கும் நிகழ்ச்சி சோகண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த ஊராட்சித் தலைவா் பூா்ணிமா பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பால்ராஜ் முன்னிலை வகித்தாா்.
இதில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதி டான்போஸ்கோ பங்கேற்று குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியைத் திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் ஊராட்சித் தலைவா் சாா்லஸ், சோகண்டி ஊராட்சி துணைத் தலைவா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.