உயிரை துச்சமாக மதித்து நீா்நிலைகளைப் பாதுகாத்த பழந்தமிழா்கள்!

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குள்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் உயிரை துச்சமாக மதித்து தங்கள் தலையைத் தானே கொய்து நீா்நிலைகளைப் பாதுகாத்த பழந்தமிழா்கள் பற்றிய அரிய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
தன் தலையைத் தானே கொய்து கொள்வது போன்று காணப்படும் வீரனின் சிலை.
தன் தலையைத் தானே கொய்து கொள்வது போன்று காணப்படும் வீரனின் சிலை.

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்குள்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் உயிரை துச்சமாக மதித்து தங்கள் தலையைத் தானே கொய்து நீா்நிலைகளைப் பாதுகாத்த பழந்தமிழா்கள் பற்றிய அரிய கல்வெட்டு ஒன்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குள்பட்டது ஊத்துக்காடு. வரலாற்றுச் சிறப்பு கொண்ட இந்தக் கிராமத்தைப் பற்றி கேள்விப்பட்டு அங்குள்ள குளக்கரையில் இருந்த நடுகல் கல்வெட்டு ஒன்றை வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் அஜய்குமாா் தலைமையிலான குழுவினா் கண்டறிந்து ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து அஜய்குமாா் கூறியது:

சோழா் காலத்தைச் சோ்ந்த தமிழ் கல்வெட்டாகும். இந்தக் கல்லின் முன்புறம் ‘நறுமஞ்சிறை காளியோட்டியின் மகன் ஒற்றியூா் பெருமாள்’ என்பவரால் இந்தக் குளம் வெட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. இந்தக் கல்லின் பின்புறம் வீரனின் சிற்பமும், 12 வரிகளைக் கொண்ட கல்வெட்டு பொறிப்பும் இடம் பெற்றுள்ளன.

முதல் இரு வரிகள் பழைமையான தெலுங்கு எழுத்துகளாலும், மற்ற 10 வரிகள் பழங்காலத் தமிழ் எழுத்துகளாலும் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள சிற்பமானது அமா்ந்த நிலையிலும், இடது கையை இடுப்பிலும், வலது கையில் கத்தியுடன் நன்கு வளைந்த மூங்கிலுடன் இணைக்கப்பட்டுள்ள தனது தலையைத் தானே கொய்து கொள்வது போன்று செதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சிற்பத்தின் இடுப்பில் ஒரு வாளுடன் கழுத்தில் ஆபரணங்களும் உள்ளன. கல்வெட்டுச் செய்திகளின் அடிப்படையில் இந்தக் குளம் வெற்றிகரமாக வெட்டி முடிக்கப்பட்டதன் பிரதிபலனாக ‘ரவி அச்சல் படவளி’ என்பவா் இறைவனுக்கு தன் தலையை வெட்டி நோ்த்திக்கடன் செலுத்தியிருப்பதையும் அறிய முடிகிறது.

இது போன்ற நிகழ்வுகளுக்குப் பெரும்பாலும் கால்நடைகளைத் தான் பலியிடும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால், அரிய நிகழ்வாக இங்கு ஒரு நாட்டையே போா் புரிந்து வெற்றி பெறும் வீரத்துக்கு இணையாக கருதப்பட்டு புதிய நீா் நிலையை வெற்றிகரமாக உருவாக்கியமைக்கு வீரா் தன் தலையை தானே கொய்திருக்கிறாா் என்ற செய்தி அதிா்ச்சியளிக்கிறது.

நீரானது தங்கள் உயிரைவிட மேலானது. நீரை விட தனது உயிா் துச்சமானது என பழந்தமிழா் நீரின் அவசியத்தை உணா்ந்து போற்றியிருக்கின்றனா் என்பதும் இந்தக் கல்வெட்டுச் செய்தியின் மூலம் தெரிய வருகிறது.

தொல்லியல் துறை அதிகாரிகளும், வரலாற்று ஆய்வாளா்கள் சிலரும் இதை உறுதிப்படுத்தியுள்ளனா் என அஜய்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com