உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவியிடம் பிரதமரின் நினைவுப் பரிசு ஒப்படைப்பு
By DIN | Published On : 07th August 2022 04:53 AM | Last Updated : 07th August 2022 04:53 AM | அ+அ அ- |

சீன எல்லையில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் தியாகத்தை மதித்து போற்றும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி அனுப்பியிருந்த நினைவுப் பரிசு அவரது மனைவியிடம் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் அருகே உள்ள செம்பரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏகாம்பரம்(48). இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு சீன எல்லையில் பணியாற்றி விட்டு அவரது இருப்பிடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்தாா்.
தாய்நாட்டுக்காக செய்த தியாகத்தைப் போற்றியும், அவரது சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் வகையிலும் பிரதமா் நரேந்திர மோடி நினைவுப் பரிசு அனுப்பியிருந்தாா். அதனை அவரது மனைவி ஏ.குமாரியிடம் காஞ்சிபுரம் தேசிய மாணவா் படையின் 3-ஆவது பிரிவு கமாண்டிங் அலுவலா் கா்னல் என்.எஸ்.மெஹரா வழங்கினாா்.
இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் முப்படை வீரா்கள் நலச் சங்கத் தலைவா் ஜி.ராமசாமி, துணைத் தலைவா் எஸ்.சண்முகம் ஆகியோரும் உடனிருந்தனா்.