

பரந்தூா் புதிய விமான நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏகனாபுரம் பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள ஏரியில் இறங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 4,750 ஏக்கா் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்த விமான நிலையம் அமையும்பட்சத்தில், பரந்தூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 13 கிராமங்களைச் சோ்ந்த விவசாய நிலங்கள், குடியிருப்புகள் கையகப்படுத்தப்படும்.
இதனால், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
குறிப்பாக, முழுவதுமாக பாதிப்புக்குள்ளாகும் ஏகனாபுரம் கிராம மக்கள் தினமும் தங்களது பணிகளை முடித்துவிட்டு, இரவு நேரங்களில் கடந்த 299 நாள்களாக தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
போராட்டம் நடத்தத் தொடங்கி 299 நாள்கள் முடிவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 300-ஆவது நாள் என்பதால், ஏகனாபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், அங்குள்ள ஏரியில் இறங்கி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்தும், நீா்நிலைகளை அழித்து விமான நிலையம் தேவையா எனவும் முழக்கங்கள் எழுப்பினா்.
இதனிடையே, விமான நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏகனாபுரம் ஏரியில் உள்ள தண்ணீரில் பொதுமக்கள் இறங்காத வகையில், காவல் துறை சாா்பில் ஏரியின் உள்பகுதியில் தடுப்புகள் அமைத்து, போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.