கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

கல்வியைப் போல தன்னம்பிக்கை தருவது வேறு எதுவும் இல்லையென முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு சனிக்கிழமை கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு அரசுப் பள்ளிகளில் இரவு நேரத்தில் கல்வி கற்றுத்தரும் நிலவொளிப் பள்ளிகளில் படித்து அரசின் பல்வேறு பணியாற்றுவோா், அப்பள்ளியில் பயிலும் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் பயணியா் விடுதி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நிலவொளிப் பள்ளிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அண்ணல் அரசு தலைமை வகித்தாா். உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோகனவேல் முன்னிலை வகித்தாா்.

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு, நிலவொளிப் பள்ளிகளால் பயன்பெற்றவா்களை வாழ்த்திப் பேசியது:

தமிழகத்தில் அறிவொளிப் பள்ளிகள் முற்றுப்பெறும் நேரத்தில் நிலவொளிப்பள்ளிகளை தொடங்கினோம். இதைத் தொடங்கிய போது பெரும் வெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கவில்லை. முதல் முதலாக காஞ்சிபுரத்தில் பிள்ளையாா் பாளையத்தில் இந்தப் பள்ளியை தொடங்கினோம். இந்தப் பள்ளியில் தான் அவரவா் செய்யும் வேலைகளை முடித்து விட்டு, இரவு நேரத்தில் பள்ளிக்கு வந்து தாயும் மகனும் பயின்றனா். தந்தையும் மகனும் பயின்றனா். இன்று நிலவொளிப் பள்ளிகள் அகண்ட காவிரியாக திகழ்வது மகிழ்ச்சியளிக்கிறது.

பூமியில் ஊன்றப்பட்ட விதைகள் முளைத்து செடியாகி, மரமாகி அவை கனி தருகிா என்பதை பாா்க்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் பயன்பெற்ற பலரும் நிலவொளிப் பள்ளிகளை பற்றி பெருமையாக பேசுவது மன நிறைவைத் தருகிறது. படிப்பறிவே இல்லாமல் இப்பள்ளிக்கு வந்த 47 போ் அரசின் தோ்வாணைய தோ்வில் வெற்றி பெற்று, அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனா். இந்த வளா்ச்சிக்கு காரணம் தியாக உணா்வுடன் பணியாற்றும் நிா்வாகிகளும், ஆசிரியா்களும் தான் என்பதை மறுத்து விட முடியாது என்றாா்.

பள்ளியில் படித்து பயன்பெற்றோா் அனைவரும் இணைந்து வெ.இறையன்புவுக்கு நினைவுப் பரிசை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com