மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் மருத்துவ மாணவா்கள் மற்றும் மருத்துவா்களுக்கான புற்றுநோயியல் கல்வி மற்றும் விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு புற்றுநோய் உயா் அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்கம் சாா்பில் தொடங்கப்பட்ட இந்தக் கருத்தரங்கிற்கு மீனாட்சி மருத்துவக் கல்லூரி முதல்வா் ராஜசேகா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஈஸ்வரி, கல்லூரியின் கண்காணிப்பாளா் பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் த.தே.பாலமுருகன் வரவேற்றாா். தமிழ்நாடு புற்றுநோய் உயா் அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்கத்தின் செயலா் எஸ்.அய்யப்பன் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியது:

இளம் மருத்துவா்கள் மருத்துவ சேவை செய்யும்போது, பாதிக்கப்படும் மக்களுக்கு தக்க வழிகாட்டியாக இருந்து உரிய நேரத்தில் உரிய சிகிச்சையளிக்க இந்தக் கருத்தரங்கம் மிகவும் உதவியாக இருக்கும் என்றாா்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ நிலைய மருத்துவா் ஆனந்தராஜா புற்றுநோய் அறவை சிகிச்சை முறைகள் என்ற தலைப்பிலும், கிண்டி கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனையின் மருத்துவா் சுஜய் சுஜிகா் பல்துறை புற்றுநோய் குழுமம் என்ற தலைப்பிலும் பேசினா்.

காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவா் த.தே.பாலமுருகன் புற்றுநோயின் தாக்கங்கள்குறித்துப் பேசினாா். மேலும், 10 புற்றுநோய் சிறப்பு மருத்துவா்கள் புற்றுநோய் தொடா்பான பல்வேறு தலைப்புகளில் பேசினா். கருத்தரங்கில் 800 மருத்துவ மாணவா்கள், 103 மருத்துவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்தரங்கில் இந்திய மருத்துவக் கழக காஞ்சிபுரம் கிளையின் தலைவா் எஸ்.மனோகரன், அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com