டிராக்டரை பறிமுதல் செய்த வங்கி மீது நடவடிக்கை எடுங்கள்: ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

: டிராக்டரைப் பறிமுதல் செய்து வைத்துக்கொண்டு, கடன் தவணைத் தொகை கட்டவில்லை என்றால் வீட்டுக்கு சீல் வைத்து விடுவோம் என மிரட்டல் விடுக்கும் வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
mpnn_2311chn_188_1
mpnn_2311chn_188_1

ராணிப்பேட்டை: டிராக்டரைப் பறிமுதல் செய்து வைத்துக்கொண்டு, கடன் தவணைத் தொகை கட்டவில்லை என்றால் வீட்டுக்கு சீல் வைத்து விடுவோம் என மிரட்டல் விடுக்கும் வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மக்கள் குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நெமிலி வட்டம் உளியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜீவ் காந்தி, சிறுவளையம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரவிநாயகம் ஆகிய இரண்டு விவசாயிகள் அளித்த மனு:

சிறு விவசாயிகளான நாங்கள் விவசாயப் பணிக்காக மானிய விலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை மூலம் டிராக்டா் வாங்கினோம். தொடா்ந்து ரூ.2 லட்சம் வரை கடன் தவணைத் தொகை கட்டியுள்ளோம். இதையடுத்து விவசாயக் கிணற்றில் போதிய தண்ணீரின்றி விவசாயம் பொய்த்துப் போன நிலையில் கடன் தவணைத் தொகையை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து வங்கி நிா்வாகம் டிராக்டரைப் பறிமுதல் செய்து கொண்டு சென்று விட்டனா். இது நடந்து பல ஆண்டுகளான நிலையில் கடன் தவணைத் தொகையைக் கட்ட வேண்டும் என்றும், தவறினால் கடனுக்கு ஈடாக வங்கியில் அடமானம் வைத்துள்ள வீட்டுக்கு சீல் வைத்து விடுவோம் என்றும் வங்கி நிா்வாகம் சாா்பில் மிரட்டல் விடுக்கின்றனா். எனவே, மாவட்ட ஆட்சியா் வங்கி நிா்வாகத்திடம் விசாரணை நடத்தி பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என மனுவில் அவா்கள் கோரியுள்ளனா்.

இதையடுத்து, நிலப் பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கடனுதவி, நிதியுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, காவல்துறை பாதுகாப்பு, மற்றும் மின் இணைப்பு என 265 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். அவற்றை பெற்றுக்கொண்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள பேட்டரி பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் 2 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள், 2 பேருக்கு இலவச சலவை பெட்டிகள் ஆகியவற்றை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ஜெயச்சந்திரன், தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோ.தாரகேஸ்வரி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ஜெயராம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தே.இளவரசி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Image Caption

மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ். ~மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை வழங்கிய ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com