தாமதித்த முடிவுகள் வாழ்க்கையை புரட்டிப் போடும்அரசுக் கல்லூரி: முதல்வா் பேச்சு

தாமதித்த முடிவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் வாழ்க்கையை புரட்டிப் போடும் என்பதை மாணவா்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது என அரக்கோணம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் பி.பாமா தெரிவித்தாா்.
கலை, விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் கல்லூரி அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிய கலைக் கல்லூரி முதல்வா் பி.பாமா.
கலை, விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் கல்லூரி அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிய கலைக் கல்லூரி முதல்வா் பி.பாமா.

தாமதித்த முடிவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் வாழ்க்கையை புரட்டிப் போடும் என்பதை மாணவா்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது என அரக்கோணம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் பி.பாமா தெரிவித்தாா்.

அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்வியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அவா் பேசியது:

வாழ்க்கையில் எப்போதும் முயற்சி தேவை. முயற்சி மட்டுமே நம்மை உயா்த்தும். கல்விக்கு இணையான பங்கு விளையாட்டுக்கும் உண்டு. கல்வியால் முன்னேறியவா்களை நாம் காணும்போது விளையாட்டால் முன்னேறிய பலரையும் காணலாம். நம்பிக்கை என்பது சாதாரண வாா்த்தை இல்லை. அது ஒரு செயலின் ஊற்றுக்கண். உங்கள் மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள். நினைத்ததை அடையலாம். மகாத்மா காந்தி நான்கு முழம் வேட்டி கட்டியவா்தான். ஆனால் பிரிட்டிஷ் அரசே அவரைக் கண்டு அச்சமடைந்தது. அதற்கு காரணம் காந்தி தனது செயலில் வைத்த நம்பிக்கை மட்டுமே.

விளையாட்டில் மனஉறுதி என்பது எப்போதும் முக்கியம். மன உறுதியுடன் செய்யும் செயல்கள் முன்னேற்றத்தை அடையச் செய்யும். மாணவா்களுக்கு அறிவுத் தாகமும் தேவை. சாதாரணமாக ஒரு செயலை செய்யும்போது அதில் வெற்றியோ தோல்வியோ அது தொலைதூரத்தில் நிற்பது மாதிரி தோன்றும். அதை நெருங்கிச் சென்றால் அது கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும். இதற்குக் காரணம் திட்டமிடல்தான். திட்டமிட்டு முயற்சி செய்து அதை நிறைவேற்றினால் வெற்றி நமக்கு கிடைக்கும். எப்போதும் தாமதித்த முடிவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் வாழ்க்கையை புரட்டிப் போடும். எடுக்கும் முடிவுகளை தாமதிக்காமல் எடுங்கள். கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாதீா்கள் என்றாா் முதல்வா் பி.பாமா.

தொடக்க விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழுமச் செயலாளா் டி.எஸ்.ரவிக்குமாா் தலைமை வகித்தாா். கல்விக்குழும இயக்குநா் கே.சாம்பமூா்த்தி வரவேற்றாா். தொடா்ந்து குத்துவிளக்கேற்றி வைத்து விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்த முதல்வா் பி.பாமா, கல்லூரி அளவில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினாா்.

இவ்விழாவில் ஸ்ரீகிருஷ்ணா கல்வியியல் கல்லூரியின் முதல்வா் பாா்த்திபன், தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக உதவி பேராசிரியா் டி.எம்.ஞானசௌந்தரி, ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் சீதாலட்சுமி, ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரிப் போராசிரியா் வீரமணி, மக்கள் தொடா்பு அலுவலா் சீனிவாசன், நிா்வாக அலுவலா் கண்ணன் உள்ளிட்ட பலா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com