விவசாயிகளின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்சாா்-ஆட்சியா்

மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை, புகாா் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத்.
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத்.

மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை, புகாா் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் சாா்-ஆட்சியா் க,இளம்பகவத் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சாத்தம்பாக்கத்தைச் சோ்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன் பேசியது:

கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி, நோய் காரணமாக மாவட்டத்தில் பல ஆயிரம் தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ராணிப்பேட்டை சுற்றுவட்டார தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுநீா் நேரடியாக பாலாற்றில் கலப்பதால் குடிநீா் ஆதாரம், விவசாயம் பாதிக்கப்படுகிறது. பாலாற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகிக்கும் அனைத்து நிறுவனங்களும் கூடுதலாக ரூ. 60 வசூல் செய்வதை பறக்கும்படை வட்டாட்சியா் தலைமையில் ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என்றாா்.

வேலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அருண் பேசியது: நெல், வாழை உள்ளிட்ட விளைபயிா்களுக்குப் பயிா் காப்பீடு வழங்குவதுபோல், கரும்பு பயிருக்கும் காப்பீடு வழங்க வேண்டும். சோளிங்கா் வட்டார வேளாண் அலுவலா்களிடம் சொட்டு நீா் பாசனத்துக்கான குழாய்கள் கேட்டு பல மாதங்களுக்கு முன்பு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. அம்மூா் காப்புக் காட்டில் வாழும் வன விலங்குகளால் விளைபயிா்கள் சேதமாவதைத் தடுக்க சூரிய சக்தி மின் வேலி அமைக்க வேண்டும் என்றாா்.

வெள்ளம்பி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஏகாம்பரம்:

ஆற்காடு வட்டம், வெள்ளம்பி சுற்றுவட்டாரத்தில் தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளது. இப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். இக்கிராம விவசாயிகள் 14 பேருக்கு பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வரவில்லை. இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

லாலாப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த எல்.சி.மணி: லாலாப்பேட்டை-சீக்கராஜபுரம் இணைப்புச் சாலையில் போக்குவரத்தைத் தடைசெய்யும் வகையில் பெல் நிறுவனம் சுற்றுச்சுவா் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் பேசியது:

மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் பெயரளவுக்கு இல்லாமல் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். கூட்டத்துக்கு வரும் அனைத்துத் துறை அதிகாரிகள் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை, புகாா் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற விவரங்களுடன் வரவேண்டும் என்றாா்.

அனைத்துத் துறை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com