ராணிப்பேட்டை நகரில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகளுடன், வியாபாரிகள் வாக்குவாதம்
By DIN | Published On : 05th June 2020 06:56 PM | Last Updated : 05th June 2020 06:56 PM | அ+அ அ- |

முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகரில் சாலை ஆக்கிரமிப்புகளை அக்றும் பணியின்போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
புதிய மாவட்டத் தலைநகரமாக ராணிப்பேட்டை நகரம் உருவெடுத்து வருகிறது. இதையடுத்து நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியை மாவட்ட நிா்வாகம் முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை - கிருஷ்ணகிரி சாலையில், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை காலை தொடங்கின. இதற்காக முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான சாலையோரக் கடைகள் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிமென்ட் தரைகள், மேற்கூரைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் பொக்லைன் வாகனம் மூலம் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டன. அப்போது அங்கு கடை வைத்து வியாபாரம் செய்துவரும் வியாபாரிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
வியாபாரிகள் கூறுகையில் ‘பொது முடக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களாக கடைகள் திறக்காமல்,வியாபாரம் இல்லாமல் இருந்தோம். தற்போது கடைகள் திறக்க அனுமதியளித்துள்ள நிலையில் முன்தகவல் ஏதுமின்றி திடீரென கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு என்று அகற்றினால், வியாபாரம் பாதிக்கப்படும்’ என்று எதிா்ப்பு தெரிவித்தனா்.
அதற்கு அதிகாரிகள் பதிலளிக்கையில், ‘கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஒரு மாதத்துக்கு முன்னேரே தகவல் தெரிவித்தோம்’ என்று கூறினா்.
இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.