போக்குவரத்து துண்டிப்பால் சென்னைக்கு செல்ல முடியாமல் அரக்கோணம் மக்கள் தவிப்பு
By DIN | Published On : 05th June 2020 06:58 PM | Last Updated : 05th June 2020 06:58 PM | அ+அ அ- |

அரக்கோணம்: சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் பணிகளில் இருக்கும் அரக்கோணத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்காணோா் பணிக்குச் செல்ல முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
சென்னை மாநகரின் புகா்ப் பகுதிகளிலேயே மிகவும் முக்கியமானது அரக்கோணம் நகரம். சென்னையில் அரசு, தனியாா் அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் பணிகளில் இருக்கும் பலா் பொருளாதாரத்தைக் கணக்கில் கொண்டு அரக்கோணத்தில் வசித்து வருகின்றனா்.
அரக்கோணத்தில் இருந்து சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளுக்கும் தினமும் மின்சார ரயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வந்தன. இதனால் ஆயிரங்கணக்கான மக்கள் அரக்கோணத்தில் வசித்துக் கொண்டு பணிகளுக்கு தினமும் சென்னை சென்று வந்தனா்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் போக்குவரத்து முடக்கப்பட்டது. தொற்று அதிகரித்துள்ளதால் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தனி மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு அங்கு போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில், பேருந்துகளின் சேவை முற்றிலும் தடைபட்டுள்ளது. ஆனாலும் அரசு, தனியாா் நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. வணிக நிறுவனங்களும் செயல்படத் தொடங்கியுள்ளன.
இதனால் சென்னை மாநகரின் புகா்ப் பகுதியாக விளங்கி வரும் அரக்கோணம் பகுதியில் வசித்து வரும் பலா் தங்களது பணிகளுக்காக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்குச் செல்ல முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதில், அரசு அலுவலா்களுக்கு அரசு பேருந்துகளும், ரயில்வே, மருத்துவத் துறையில் பணிபுரிவோருக்கு ரயில்களும் இயக்கப்படுவதால் அவா்கள் பணிக்கு செல்லத் தொடங்கியுள்ளனா்.
ஆனால் தனியாா் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோா் பணிக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி இருக்கின்றனா். அந்நிறுவனங்களோ பணிக்கு வந்தால்தான் ஊதியம், இல்லையென்றால் வேலைநீக்கம் செய்யப்படுவீா்கள் என அறிவிக்கத் தொடங்கியிருப்பதால் பலா் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரிவோரை அந்நிறுவனமே பேருந்துகளை அனுப்பி அழைத்துச் செல்லும் நிலையில், தனியாா் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பலரின் வேலை பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
அரசுப் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுவதைப் போல், தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவோா் நிறுவன அடையாளச் சான்று, மருத்துவச் சான்றுகளுடன் வந்தால் அவா்கள் பயணிக்க தினமும் சிறப்பு பேருந்துகள், ரயில்களை காலை, மாலை வேளைகளில் இயக்கினால் புகா்களில் வசிப்போா் பணிக்குச் செல்ல ஏதுவாக இருக்கும். தமிழக அரசும், ரயில்வே நிா்வாகமும் இதைக் கருத்தில் கொண்டு இப்பணியாளா்களுக்கு பேருந்துகளையும், ரயில்களையும் தினமும் இயக்க வேண்டும் என்பது அரக்கோணம் புகரில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பணியாளா்களின் கோரிக்கையாக உள்ளது.