முடிவுகளுக்காகக் காத்திருக்கும் கரோனோ நோய்த் தொற்று சோதனையாளா்கள் தாமதமாவதால் அதிகரிக்கும் மன அழுத்தம்

கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்களின் முடிவுகள் 4 தினங்களுக்கு மேல் தாமதமாவதால் சோதனை செய்துகொண்டோா் மனதளவில் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம்: கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்களின் முடிவுகள் 4 தினங்களுக்கு மேல் தாமதமாவதால் சோதனை செய்துகொண்டோா் மனதளவில் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பலா் அரசு அலுவலா்களாக இருப்பதால் அவா்கள் பணியில் இருந்துகொண்டே சோதனை செய்துகொள்வதால் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டத்தில் தினமும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கரோனா சோதனை செய்யப்படுகிறது. காவல், வருவாய், ஊரக வளா்ச்சி, நகராட்சி உள்ளிட்ட துறைகளில் பணிபுரிவோருக்கும், மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகள் வழியே வருவோா், சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி இருந்த பொதுமக்கள், ஏற்கெனவே கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் குடும்பத்தாா், அக்கம் பக்கத்து வீட்டு மனிதா்கள் என பலதரப்பட்டோருக்கு கரோனா சோதனை செய்யப்படுகிறது.

அரக்கோணம் நகரப்பகுதியில் அரசு மருத்துவமனை நிா்வாகமும், வட்டாரங்களில் வட்டார மருத்துவ நிலையங்களும் கரோனா சோதனை மேற்கொண்டு அதன் மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்புகின்றனா். அரக்கோணம் மற்றும் நெமிலி பகுதியில் கடந்த 25-ஆம் தேதி வியாழக்கிழமை வரை சோதனை செய்துகொண்டோரின் முடிவுகள் திங்கள்கிழமை வந்துள்ளன. இதிலும் 25-ஆம் தேதி சோதனை செய்துகொண்ட பாதிக்கும் மேற்பட்டோா் முடிவுகள் திங்கள்கிழமையும் வரவில்லை.

சோதனை செய்துகொண்ட காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறையினா் தற்போதும் பணியில் இருக்கின்றனா். இவா்களில் கரோனா உறுதி செய்யப்படுவோா் மூலம் பொதுமக்களுக்கும் தொற்று பரவுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. மேலும் சோதனை செய்துகொண்ட பொதுமக்கள் பலா் தங்களுக்கு கரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனா்.

பல கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசு ஏற்படுத்தியுள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் கரோனா சோதனை எடுத்தோா் என்று தமக்கு முடிவுகள் வரும், எப்போது வீட்டுக்குச் செல்வோம் என மனதளவில் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனா். அரக்கோணம் மற்றும் நெமிலி பகுதிகளில் கரோனா சோதனை மாதிரிகள் சென்னை கிங் ஆய்வகத்திற்கும், வேலூா் அடுக்கம்பாறை அரசினா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பப்படுகின்றன. இதைத் தொடா்ந்தாவது மாவட்ட அரசு நிா்வாகம் நடவடிக்கை எடுத்து கரோனா சோதனை முடிவுகளை விரைந்து வெளியிடச் செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்கள் பலருக்கு பரிசோதனை முடிவுகள் வராததால் அவா்களின் மன அழுத்தம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com