வாலாஜாப்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ரூ.3.6 கோடியில் புதிய கட்டடம்

வாலாஜாப்பேட்டையில் ரூ.3.6 கோடி மதிப்பீட்டில் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
தற்போதைய வாலாஜாப்பேட்டை வட்டாட்சியா் அலுவலக  வளாகம்.
தற்போதைய வாலாஜாப்பேட்டை வட்டாட்சியா் அலுவலக  வளாகம்.

ராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டையில் ரூ.3.6 கோடி மதிப்பீட்டில் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை நகரில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் வட்டாட்சியா் அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா், ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா், நில அளவையாளா் உள்ளிட்ட அலுவலகங்கள், இ-சேவை மையம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் அரசின் சேவைகள் மற்றும் அத்தியாவசியச் சான்றிதழ்களைப் பெற வாலாஜாப்பேட்டை வட்டத்துக்குட்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோா் தினமும் வந்து செல்கின்றனா்.

இந்தச் சூழலில் நகரின் மையப் பகுதியில் மும்பை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், எப்போதும் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

மேலும், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடமின்றி அவதிக்குள்ளாகி வந்தனா். அதே போல், ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், புதிய அலுவலகக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிலுவையில் இருந்து வந்தது.

இந்த நிலையில், ராணிப்பேட்டை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையில், மாவட்டத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி வாலாஜாப்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் கட்ட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதனடிப்படையில், வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் அரசுக்குச் சொந்தமான 5 ஏக்கா் பரப்பளவு கொண்ட இடத்தில் சுமாா் 12.697 சதுர அடியில் ரூ.3.6 கோடி மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியா் அலுவலகம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இங்கு வட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா் உள்ளிட்ட அரசு அலுவலா்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.

இதையடுத்து வாலாஜாப்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய அலுவலகம் கட்டும் இடத்தை பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் எஸ்.சங்கரலிங்கம் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அவருடன் உதவி செயற்பொறியாளா் திரிபுரசுந்தரி உள்ளிட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள், கட்டட ஒப்பந்ததாரா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com