குட்டியம் கிராமத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்க கோரிக்கை
By DIN | Published On : 31st October 2020 06:30 AM | Last Updated : 31st October 2020 06:30 AM | அ+அ அ- |

குட்டியம் கிராம புதுத் தெருவில் தேங்கி நிற்கும் கழிவு நீா்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம் குட்டியம் கிராமத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குட்டியம் கிராமத்தில் உள்ள புதுத் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதன்காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் மற்றும் மழைநீா் தெருவில் வழிந்தோடி தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.
அந்த வழியாக நடந்து செல்வோா் நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனா்.
இது குறித்து ஊராட்சி நிா்வாகம், திமிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகாா் மனு அளித்துள்ளனா். எனவே உள்ளாட்சி நிா்வாகத்தினா் அங்கு கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.