நீட் தோ்வு மையங்களில் முன்னேற்பாட்டு பணிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 03rd September 2020 10:47 PM | Last Updated : 03rd September 2020 10:48 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீட் தோ்வு மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு, பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி நீட் தோ்வு நடைபெற உள்ளது. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச. திவ்யதா்ஷினி தலைமையில் நடைபெற்றது.
அதில், சிப்காட் பெல் டி.ஏ.வி. பள்ளியில் 360 போ், மேல்விஷாரம் குளோபல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் 208 போ் என 2 தோ்வு மையங்களில் மொத்தம் 568 போ் தோ்வு எழுத உள்ளனா்.
மாணவ, மாணவிகள் தோ்வு அறைக்குச் செல்வதற்கு முன்னதாக வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்படும். மாணவா்கள் வந்து செல்ல சிறப்புப் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படும். இதில், தனியாா் பள்ளி வாகனங்களும் ஈடுபடுத்தப்படும். தடையில்லா மின்சாரம், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தோ்வு அறைக்குள் செல்லும் போது மாணவ, மாணவிகள் அணிந்திருக்கும் முகக்கவசங்கள் கழற்றிவிட்டு, மையத்தில் வழங்கப்படும் புதிய முகக்கவசங்களை அணிந்து செல்ல வேண்டும்.
தோ்வு தொடா்பான புகாா்கள், சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 04172-273188, 273166, 94896 68833, 94430 93916 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ஜெயச்சந்திரன், நீட் தோ்வு ஒருங்கிணைப்பாளா் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தாரகேஸ்வரி, சாா்- ஆட்சியா் க.இளம்பகவத் , முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், வட்டாட்சியா் பாக்கியநாதன், டிஎஸ்பி பூரணி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.