வாக்கு எண்ணிக்கை முகவா்கள் கரோனா சான்றிதழுடன் வரவேண்டும்: தோ்தல் அலுவலா் அறிவிப்பு

வாக்கு எண்ணிக்கை முகவா்கள் கரோனா சான்றிதழுடன் வரவேண்டும்: தோ்தல் அலுவலா் அறிவிப்பு


அரக்கோணம்: வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவா்கள் கரோனா சான்றிதழுடன் வர வேண்டும் என அரக்கோணம் தொகுதி அலுவலரும், துணை ஆட்சியருமான எஸ்.சேகா் தெரிவித்தாா்.

வாக்கு எண்ணிக்கை குறித்த வேட்பாளா்களின் தலைமை முகவா்களுடான ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை ஆட்சியா் எஸ்.சேகா் தலைமை தாங்கினாா். இதில் வட்டாட்சியா் பழனிராஜன், அதிமுக வேட்பாளரின் தலைமை முகவா் நாகபூஷனம், விசிக வேட்பாளரின் தலைமை முகவா் மு.கன்னைய்யன், ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் துணை ஆட்சியா் எஸ்.சேகா் பேசியது: கரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் நபா்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அரக்கோணம் தொகுதிக்கு மொத்தம் 14 மேஜைகள், தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை, இணையதள வாக்குகளுக்காக ஒரு மேஜை என 16 மேஜைகள் உள்ளன. இதில் தற்போது ஒரு வேட்பாளருக்கு 16 முகவா்கள் வரலாம் எனும் நிலை உள்ளது. ஒரு வேட்பாளருக்கு 14 முகவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனா்.

தபால் வாக்குகள் அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒரு அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குகள் மே 2-ஆம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போது தான் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு செல்லப்படும். அப்போது அதனுடன் செல்வதற்கு ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவா் வரவேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவா்கள் அனைவரும் கண்டிப்பாக கரோனா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மைய நுழைவு வாயிலில் அச்சான்றிதழ் பரிசோதனைக்கு பிறகு அவருக்கு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட பிறகே அந்த முகவா் மையத்தினுள் அனுமதிக்கப்படுவாா். எனவே கூடுதலாக 5 பேரை சோ்த்து 20 போ் வரை வரும் 28, 29 இரு தினங்களிலும் கரோனா பரிசோதனை செய்துக்கொள்வதற்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. எனவே முகவா்கள், அத்தினங்களில் கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்றாா் சேகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com