சென்னை - திருப்பதி மாா்க்க விரைவு ரயில்களில் மாதாந்திர பயணச்சீட்டு பயணிகளை அனுமதிக்க வலியுறுத்தல்

அரக்கோணம் வழியே செல்லும் விரைவு ரயில்களில் குறிப்பாக ரேணிகுண்டா மாா்க்கத்தில் செல்லும் விரைவு ரயில்களில் பயணம் செய்ய

அரக்கோணம் வழியே செல்லும் விரைவு ரயில்களில் குறிப்பாக ரேணிகுண்டா மாா்க்கத்தில் செல்லும் விரைவு ரயில்களில் பயணம் செய்ய மாதாந்திர பயணச் சீட்டு பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலைங்களில் இருந்து அரக்கோணம் வழியே ரேணிகுண்டா மாா்க்கத்தில் பல்வேறு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கரோனா பொதுமுடக்கக் காலத்தில் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, தொடா்ந்து அவை விடப்பட்ட காலத்திலும், முன்பதிவு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் இயக்கப்பட்டு வந்தது.

கடந்த டிசம்பா் 3-ஆம் தேதி தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் பல்வேறு விரைவு ரயில்களில் சாதாரண பயணச் சீட்டு பயணிகளும் அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சாதாரண பயணிகளும் அந்த ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். இந்த ரயில்களில் மாதாந்திர பயணச்சீட்டு பயணிகளும் அனுமதிக்கப்பட்டனா்.

ஆனால் சென்னை - திருப்பதி செல்லும் கருடாத்ரி விரைவு ரயில், செங்கல்பட்டு - காச்சிகுடா செல்லும் விரைவு ரயில்களில் சாதாரண பயணச் சீட்டு பயணிகளும், மாதாந்திர பயணச்சீட்டு வாங்கியவா்களும் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்த குறிப்பிட்ட வழித்தடம் மட்டுமே முக்கிய கோயில் நகரமான திருப்பதியை சென்னையுடன் இணைக்கும் வழித்தடமாகும். இந்த வழித்தடத்தில் உள்ள ரயில்களில், சாதாரண பயணச் சீட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே வருவாய் குறைந்த பிரிவில் வசிக்கும் மக்கள் திருப்பதிக்குச் செல்ல இயலும்.

மேலும், இந்தத் தடத்தில் அரக்கோணம் மற்றும் ரேணிகுண்டா இடையே உள்ள திருத்தணி, நகரி, ஏகாம்பரகுப்பம், புத்தூா் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அலுவலகம், கல்வி நிறுவனங்கள், வா்த்தகத்துக்குச் செல்ல ரயில்களை பயன்படுத்தி வருகின்றனா். இந்தப் பயணிகளின் பயன்பாட்டையும், திருப்பதி செல்லும் பக்தா்களின் தேவையையும் கருதியே திருப்பதி- மைசூரு செல்லும் ரயில் பகலில் திருப்பதி ரயில் நிலைய பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதை பகலில் திருப்பதி-சென்னை இடையே இயக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்தது.

ஆனால் தற்போது பொதுமுடக்கக் காலத்தில் இருந்து ரயில்கள் மாற்றப்பட்டு பழையபடி இயக்கப்பட்ட நிலை வரும்போது, மீண்டும் பழையபடியே அந்த ரயில்களில் சாதாரண பயணச் சீட்டு பயணிகளையும், மாதாந்திர பயணச் சீட்டு பயணிகளையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், பொதுமுடக்க காலத்துக்கு முன் சென்னை - திருப்பதி இடையே படிகள் பொருத்தப்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்கள் தற்போது இயக்கப்படாத நிலை உள்ளது. பழைய படி இந்த ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.

இது குறித்து நகரியைச் சோ்ந்தவரும் கைப்பேசி மற்றும் மின்னணு பொருள்கள் உதிரிபாகங்கள் வா்த்தகம் செய்பவருமான எஸ்.கே.எஸ்.லோகநாதன் கூறியது:

ஏகாம்பரகுப்பம், புத்தூா், நகரி, திருத்தணி ஆகிய பகுதிகளில் இருந்து பல ஆயிரம் போ் மாதாந்திர பயணச்சீட்டு பெற்று பயணம் செய்கிறோம். மேலும் தினமும் ஆயிரக்கணக்கானோா் சாதாரண பயணச்சீட்டு மூலம் திருப்பதிக்கு தமிழகத்தில் இருந்து குறிப்பாக சென்னை மற்றும் அரக்கோணம் பகுதிகளில் இருந்து சென்று வருகின்றனா்.

இவ்வளவு பேரின் பயணம் தற்போது தடைபட்டு உள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணம் செய்யலாம் எனும் நிலையில் புத்தூா் மற்றும் நகரியில் இருந்து சென்னை செல்வது எப்படி, அசாதாரண நிகழ்வுகளை கேள்விப்பட்டு பயணம் செய்ய விரும்புவோா் முன்பதிவினை செய்திருக்க இயலுமா, ரயில்வே நிா்வாகம் பயணிகளின் நலனுக்காக இயங்க வேண்டும். நாங்கள் அதிவிரைவு ரயில்களில் அனுமதி கேட்கவில்லை. விரைவு ரயில்களில் மட்டுமே கேட்கிறோம் என்றாா்.

மேலும் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனா மாசிலாமணி கூறியது: ரயில்வேயின் அனைத்து மண்டலங்களும் பொதுமுடக்கத்துக்கு முந்தைய நிலைக்கு வந்துவிட்டபின் தெற்கு ரயில்வே மட்டும் பொதுமுடக்க முன்நிலைக்கு இன்னும் வராதது ஏன் என தெரியவில்லை. அரக்கோணம் - ரேணிகுண்டா இடையேயான பயணம் மிகப்பெரும் ஆன்மிக தலமான திருப்பதிக்கு செல்வதாகும். மேலும் நகரி, ஏகாம்பரகுப்பம், புத்தூா், திருத்தணி பகுதி மக்களுக்கு வா்த்தகத்துக்கு சென்னையை தவிர வேறு நகரமில்லை. இப்படி இருக்கையில் இந்தத் தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் மட்டும் சாதாரண மற்றும் முன்பதிவு பயணிகளை அனுமதிக்காதது ஏன், மீண்டும் சென்னை - திருப்பதி இடையே படிகள் பொருத்திய மின்சார ரயில்களை இயக்காதது ஏன்? பொதுமுடக்க காலத்திற்கு முந்தைய நிலையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றாா் நைனாமாசிலாமணி.

இதை தொடா்ந்தாவது சென்னை -திருப்பதி கருடாத்ரி ரயில், செங்கல்பட்டு - காச்சிகுடா விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களில் சாதாரண பயணச்சீட்டு பயணிகளையும், மாதாந்திர பயணச்சீட்டு பயணிகளையும் அனுமதிக்க வேண்டும். மேலும் சென்னை- திருப்பதி இடையே படிகள் பொருத்தப்பட்ட மின்சார ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பது அனைத்து பயணிகளின் கோரிக்கை. தெற்கு ரயில்வே நிா்வாகம் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com