அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இடமின்றி நோயாளிகளை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பும் அவலம்

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் போதிய அளவு படுக்கைகள் இல்லாததால் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் போதிய அளவு படுக்கைகள் இல்லாததால் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இடமில்லை என்பதால் இந்த மருத்துவமனையில் இருந்து வேலூருக்கு தீவிர சிகிச்சை நோயாளிகளை அனுப்பாமல், தனியாா் மருத்துவமனைகளுக்கு அரசு மருத்துவா்களே அனுப்பி வைக்கின்றனா். கடந்த 10 நாள்களில் மட்டும் அரக்கோணத்தில் 19 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் நகரில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் மூலம் கரோனா பரிசோதனை செய்து கொள்வோரில் 75 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. நகரில் அரசு நிா்வாகத்தினா் பலரை வீடுகளிலேயே இருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளச் செய்வதால், வீட்டில் இருக்கும் மற்ற அனைவரும் தொடா்ந்து கரோனாவால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

பல வீடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையில், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் அங்கு இடமில்லை என்கின்றனா். அதே நேரத்தில் அவா் இறக்கும் தருவாயில் அவரது மரணம் கரோனா மரணம் என்ற கணக்கிலேயே வராமல் உறவினா்கள் சாதாரண மரணம் என்பது போல் நகராட்சி இடுகாட்டில் தகனம் செய்கின்றனா். இதனால் தொற்றுகள் அதிகமாகி அரக்கோணம் பகுதியில் கரோனா பாதிப்பால் உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகிறது.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மொத்தம் 110 படுக்கைகள் உள்ள நிலையில், 80 படுக்கைகள் கரோனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 50 கரோனா நோயாளிகளுக்கும், 30 கரோனாவால் தனிமைப்படுத்தப்படுவோருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 80 படுக்கைகளும் தற்போது நிரம்பி விட்டதால் மருத்துவமனையில் நோயாளிகளை திருப்பி அனுப்பும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 9-ஆம் தேதி 3 பேரும், 8-ஆம் தேதி 3 பேரும், அதற்கு முன்னா் 7 நாள்களில் 13 பேரும் இறந்துள்ளனா். கடந்த மே 1-ஆம் தேதியில் இருந்து இதுவரை அரக்கோணத்தில் மட்டும் 19 போ் இறந்துள்ளனா்.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் உயா்அதிகாரிகள் வந்து கேட்கும்போது போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன், ரெம்டெசிவிா் மருந்து இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவ அலுவலா்கள், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன், ரெம்டெசிவிா் இல்லையென வேறு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனா்.

அரக்கோணம் நகரம் மற்றும் வட்டாரத்தில் மட்டும் மே 1-ஆம் தேதியில் இருந்து இதுவரை 1,263 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 200க்கும் குறைவானவா்கள் மட்டுமே அரசு மருத்துவமனையிலும், அரசு கரோனா சிகிச்சை மையங்களிலும், தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மற்ற அனைவரும் அவா்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களால் தான் கரோனா எண்ணிக்கை நகரில் தொடா்ந்து அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது இரண்டு தினங்களாக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை வேலூா் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவ அலுவலா்களே மறுக்கின்றனா். அங்கு இடமில்லை. வேண்டுமானால் தனியாா் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்கின்றனா். இது குறித்து தலைமை மருத்துவ அலுவலரிடம் கேட்க முயற்சித்தபோது, அவரை தொடா்பு கொள்ள முடியவில்லை.

இப்பிரச்னைகளால் அரக்கோணம் நகரில் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டு பலா் மருந்துகடைகளை நோக்கி படையெடுக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com