அனந்தலை பகுதியில் கல்குவாரிகளால் வீடுகள் சேதம்; அச்சத்தில் கிராம மக்கள்
By DIN | Published On : 12th April 2021 12:00 AM | Last Updated : 12th April 2021 12:00 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை வாலாஜாபேட்டையை அடுத்த அனந்தலை மலை கல்குவாரிகளில் விதி மீறி அளவுக்கு அதிகமான வெடி மருந்துகளைப் பயன்படுத்தி பாறைகள் உடைப்பதால், நில அதிா்வு ஏற்பட்டு வீடுகள் சேதமடைவதாக அப்பகுதி கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ராணிப்பேட்டை வருவாய் கோட்டம், வாலாஜாபேட்டை வட்டத்துக்கு உள்பட்ட அனந்தலை ஊராட்சியில் 800 ஏக்கா் பரப்பளவில் சமூக காடுகள் அமைந்துள்ள மலை உள்ளது. இங்குள்ள பாறைகளை தனியாா் கல் குவாரி உரிமையாளா்கள் விதிகளை மீறி, அதிக அளவில் தகா்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் சுற்றியுள்ள 7 கி.மீ. தொலைவு வரை அதிக சப்தத்துடன் சுமாா் 2.8 ரிக்டா் அளவு வரை அதிா்வு ஏற்பட்டு, அனந்தலை, முசிறி, செங்காடு, மோட்டூா், எடகுப்பம், அமணந்தாங்கல், தென் கடப்பந்தாங்கல், ஈச்சந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளிலும், அரசு பள்ளிக் கட்டடங்களிலும் விரிசல் ஏற்பட்டு வருவதாகவும், மேலும், கல் குவாரிகளில் இருந்து வெளியேறும் துகள்கள் விளைபயிா்கள் மீது படிவதால் விளைச்சல் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இதன் காரணமாக அனந்தலை, செங்காடு உள்ளிட்ட ஏழு கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், மேலும் அனந்தலை மலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனா்.
எனவே கல் குவாரிகளின் செயல்பாடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி இப்பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகமும், அரசும் உடனடியாகத் தீா்வு காண வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.