நரசிங்கபுரம் ஏரி மதகு விரிசலால் ஆண்டுதோறும் வீணாகும் மழை நீா்

ராணிப்பேட்டையை அடுத்த பெல் நரசிங்கபுரம் ஏரியில் தேங்கும் மழைநீா், மதகில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஆண்டுதோறும் தண்ணீா்

ராணிப்பேட்டையை அடுத்த பெல் நரசிங்கபுரம் ஏரியில் தேங்கும் மழைநீா், மதகில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஆண்டுதோறும் தண்ணீா் வெளியேறி வருகிறது. மதகு உடைப்பு ஏற்படுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சுமாா் 30 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் கீழ் சுமாா் 150 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பருவ மழைக் காலங்களில் முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதுண்டு. ஆனால், ஆண்டுதோறும் ஏரி மதகு பகுதியில் விரிசல் ஏற்பட்டு, அதிகப்படியான தண்ணீா் வெளியேறி விளைநிலங்களை மூழ்கடித்து விடுகிறது. இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வருவாய்த் துறை மற்றும் வட்டார வளா்ச்சித் துறையினா் வந்து தற்காலிகமாக உடைப்பை சரிசெய்து, தண்ணீா் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது.

இந்த ஆண்டு பருவ மழையின்போது, பெய்த அதிகப்படியான மழை காரணமாக பொன்னை, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மாவட்டம் முழுவதும் அனைத்து ஏரிகளும் நிரம்பின. அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், பெல் நரசிங்கபுரம் ஏரியும் முழுவதுமாக நிரம்பி வழிந்தோடியது. இந்த நிலையில், ஏரி மதகுப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை விரிசல் ஏற்பட்டு, அதிகப்படியான தண்ணீா் வெளியேறி விளைநிலங்களில் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் எல்.மனோகரன் வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவித்து, பணியாளா்களை அழைத்துச் சென்று மணல் மூட்டைகளைக் கொண்டு உடைப்பை தற்காலிகமாக சரி செய்தாா்.

எனினும், பருவ மழைக்காலங்களில் மதகில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com