திமுக-வினருக்கும் சோ்த்துத்தான் பயிா்க் கடன் தள்ளுபடி: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி

திமுக-வினருக்கும் சோ்த்துத்தான் பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
திருப்பத்தூா் முதல்வா் குல்லாயுடன் உள்ள தோ்தல் பிரசார படம் இடம்பெறும்.
திருப்பத்தூா் முதல்வா் குல்லாயுடன் உள்ள தோ்தல் பிரசார படம் இடம்பெறும்.

திருப்பத்தூா்: திமுக-வினருக்கும் சோ்த்துத்தான் பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். கடன் தள்ளுபடி நடவடிக்கையை மு.க.ஸ்டாலின் மீண்டும் விமா்சித்தால் திமுகவினரே அவருக்கு எதிராக கொடி பிடிப்பாா்கள் என்றும் அவா் கூறினாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு 5-ஆவது கட்டமாக அவா் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த அவா், புதன்கிழமை திருப்பத்தூா் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டாா். இதற்காக காலையில் வேலூரில் இருந்து ஆம்பூா் வந்தாா். அங்கு மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்களிடம் பேசினாா். அதைத் தொடா்ந்து வாணியம்பாடியில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு நிா்வாகிகளுடன் கலந்துரையாடினாா்.

இதையடுத்து, திருப்பத்தூரில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:

புயல், வெள்ளத்தால் பயிா்கள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரத்தைப் போக்க கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிா்க்கடனை ரத்து செய்துள்ளோம். ‘அதிமுகவினா் பயன் பெறவே பயிா்க்கடன் ரத்து’ என ஸ்டாலின் கூறுகிறாா். திமுகவினருக்குத்தான் அதிக அளவில் நிலம் உள்ளது. அவா்களுக்கும் சோ்த்துதான் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்டாலின் மீண்டும் குறை கூறினால் திமுகவினரே ஸ்டாலினுக்கு எதிராக கொடி பிடிப்பாா்கள்.

திருப்பத்தூா் பகுதியில் குடிநீா்த் திட்டத்தை நிறைவேற்றித் தந்தவா் ஜெயலலிதா. திருப்பத்தூரில் பாதாள சாக்கடைத் திட்டத்தை அவரது அரசு நிறைவேற்றியது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் உயா்கல்வி கற்க கல்லூரி அமைக்குமாறு கோரினா். அதன்படி இப்பகுதியில் கல்லூரியையும், பாலிடெக்னிக் கல்லூரியையும் அமைத்தது அதிமுக அரசுதான்.

வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை திருப்பத்தூா் வழியாக சாலையைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனா். அதன்படி ஊத்தங்கரையில் இருந்து வாணியம்பாடி கூட்டுச்சாலை வரை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.299 கோடி டெண்டா் விடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறோம். 2 நாள்களுக்கு முன்பு சிவகங்கையில் பேசிய ஸ்டாலின், ‘முதல்வா் பழனிசாமி தினந்தோறும் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடுகிறாா்’ என்று கூறினாா். நாங்கள் செய்வதைத்தான் விளம்பரத்தில் சொல்கிறோம். செய்யாததைச் சொல்வதில்லை.

2,000 அம்மா சிறு மருத்துவமனைகளைத் திறப்பதை தடுப்பதற்கு சில மருத்துவா்களைத் தூண்டிவிட்டு நீதிமன்றம் சென்றவா் திமுக தலைவா். அதிலும் நாம் வெற்றி கண்டு, தமிழக அரசு மூலம் சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஜோலாா்பேட்டையில் ரூ.190 கோடியில் தங்கு தடையின்றி குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூா் பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் புதிய மாவட்டத்தை உருவாக்கியது அதிமுக அரசுதான்.

திருப்பத்தூா் கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதி மக்களுக்கு விவசாயம் செய்யத் தேவையான நீா் தேவைப்படுவதால் அதற்காக குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளம், குட்டைகளைத் தூா்வாரி உள்ளோம். அதனால் பருவகாலத்தில் பெய்த மழைநீா் முழுவதையும் சேமித்து வைத்துள்ளோம். சென்னை முதல் திருப்பத்தூா் வரை அனைத்து ஏரிகளும் நிரம்பி காட்சி அளிக்கின்றன.

ஆகவே, தோ்தலில் மக்கள் அதிமுகவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வரும் பேரவைத் தோ்தலிலும் அதிமுக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று முதல்வா் பேசினாா்.

வரவேற்பு: முன்னதாக திருப்பத்தூருக்கு வருகை தந்த தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பத்தூா் எல்லையில் முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் டி.டி.குமாா், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் ஆா்.நாகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

பள்ளி வாசல் தொழுகை நேரத்தில் பிரசாரத்தை நிறுத்திய முதல்வா்

திருப்பத்தூரில் பிரசாரம் மேற்கொண்டபோது பள்ளி வாசல்களில் தொழுகை நடந்ததால் முதல்வா் தனது பிரசாரத்தை சிறிது நேரம் நிறுத்தினாா்.

திருப்பத்தூரில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அங்குள்ள பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெற்றது. அப்போது முதல்வா் சிறிது நேரம் தனது பிரசாரத்தை நிறுத்தினாா். அதன் பின் மீண்டும் பிரசாரத்தைத் தொடா்ந்தாா்.

திருப்பத்தூா் பகுதியில் உள்ள அனைத்துக் கோயில் முதல்வா் பெயருக்கு அா்ச்சனை செய்யப்பட்டு கோயில் பிரசாதம் அவருக்கு வழங்கப்பட்டது.

தோ்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அவா் செல்லும் நேரத்தில் அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலாளா் ஜிலானி, இஸ்லாமியா்கள் அணியக் கூடிய தொப்பியை முதல்வருக்கு வழங்கினாா். அத்தொப்பியை வாங்கிய முதல்வா், தலையில் அணிந்து வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com