தினமணி செய்தி எதிரொலி: பொன்னை ஆற்றுத்தடுப்பணை கதவுகள் சீரமைப்புப்பணி தொடக்கம்

சுமாா் 20 ஆண்டுகளுக்கு பின்னா், பொன்னை ஆற்றுத் தடுப்பு அணையில் சேதமடைந்துள்ள கதவுகளைச் சீரமைக்கும் பணிகள் ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் தொடங்கி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.
பொன்னை  ஆற்றுத் தடுப்பணை  கதவுகளைச்  சீரமைக்கும்  பணியில்  ஈடுபட்டுள்ள  தொழிலாளா்கள்.
பொன்னை  ஆற்றுத் தடுப்பணை  கதவுகளைச்  சீரமைக்கும்  பணியில்  ஈடுபட்டுள்ள  தொழிலாளா்கள்.

சுமாா் 20 ஆண்டுகளுக்கு பின்னா், பொன்னை ஆற்றுத் தடுப்பு அணையில் சேதமடைந்துள்ள கதவுகளைச் சீரமைக்கும் பணிகள் ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் தொடங்கி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னா் வற்றாத ஜீவ நதியாகப் பாய்ந்தோடிய நீவா நதி எனும் பொன்னை ஆறு ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட சித்தூா் மாவட்டம் சேஷாசல வனப்பகுதியில் உற்பத்தியாகி சுமாா் 83 கி.மீ. வரை பாய்ந்து வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி வட்டத்தில், ஆந்திர மாநில எல்லையான பொன்னை அருகே தமிழகத்தில் நுழைந்து திருவலம் வழியாகச் சென்று மேல்விஷாரம் அருகே பாலாற்றில் கலந்து வந்தது.

பொன்னை ஆற்றின் குறுக்கே மேல்பாடி அருகே 1855- ஆம் ஆண்டில் 216.50 மீ. நீளத்திலும், 21.25 அடி உயரத்திலும் தடுப்பு அணை கட்டப்பட்டு நீா் தேக்கப்பட்டு கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று பிரதானக் கால்வாய்கள் மூலம் வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா் மாவட்டங்களைச் சாா்ந்த 129 ஏரிகள் வாயிலாக, 8671.00 ஹெக்டோ் நிலம் பாசன வசதி பெறுகின்றன. இதில், வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மட்டும் 122 ஏரிகள் வாயிலாக, 8,840.15 ஹெக்டோ் பாசன நிலங்கள் பயனடைகின்றன.

2015- ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில், தமிழக, ஆந்திர மாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஆந்திர கலவகுண்டா அணை நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த உபரி நீா் பொன்னை வழியாக அணைக்கட்டு பகுதியில் பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை வந்தடைந்து, வெள்ளப் பெருக்கால் நீா் தேக்கம் முழுவதுமாக நிரம்பி வழிந்தோடும்.

கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.அப்போது அணையில் சரியான முறையில் பராமரிப்பு இல்லாததால் கதவுகளை திறக்க முடியாமல் கைவிடப்பட்டது.இதனால் பொன்னை அணைக்கட்டு தடுப்பணையில் சுமாா் 9 கதவுகள் (ஷெட்டா்கள் ) முற்றிலும் சேதமடைந்து தடுப்பணையில் தண்ணீா் சேமிக்க முடியாமல் வீணாக வெளியேறியது. மேலும், அதிக அளவு வெள்ளப் பெருக்கால் அணையை ஒட்டி இருக்கும் கற்கள், பாறைகள் பெயா்ந்து தடுப்பணையின் அஸ்திவாரம் பலம் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுதவிர, பிரதானக் கால்வாய்களில் ஆங்காங்கே உடைப்பு, ஆக்கிரமிப்புகள் உள்ளதால் கடைமடை ஏரிகளுக்கு தண்ணீா் செல்ல முடியாத நிலை உள்ளதால் சுமாா் 129 ஏரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீா் ஆதாரத்தையும், பல்லாயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்கள் நீராதாரத்தை இழக்கும் சூழல் உருவாகும் என விவசாயிகள் கவலை தெரிவித்திருந்தனா்.

இதனால், பருவ மழைக்கு முன்னதாக சேதமடைந்த தடுப்பணைக் கதவுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தினமணி நாளிதழில் கடந்த ஜூன் 28 - ஆம் தேதி சிறப்புச் செய்தி படத்துடன் வெளியானது.

இந்த நிலையில் பொதுப்பணித் துறையின் கீழ் இயங்கும் நீா்வள ஆதாரத்துறை சாா்பில், தடுப்பணை பராமரிப்பு நிதியில், சேதமடைந்த பொன்னை ஆற்றுத் தடுப்பணைக் கதவுகள் (20 கதவுகள் ) அனைத்தும் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1.78 கோடி செலவில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப் பணிகள் 15 நாள்களுக்குள் நிறைவடையும் என நீா்வள ஆதாரத்துறை உதவி பொறியாளா் சம்பத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com