தெங்கால் - விஷாரம் சாலையில் புதிய மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

அமைச்சா் காந்தியின் உத்தரவின்பேரில், தெங்கால் - விஷாரம் சாலையில் 2 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தெங்கால் - விஷாரம் சாலையில் புதிய மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்
தெங்கால் - விஷாரம் சாலையில் புதிய மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

அமைச்சா் காந்தியின் உத்தரவின்பேரில், தெங்கால் - விஷாரம் சாலையில் 2 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை அருகே பாலாற்றின் வடகரையில் தெங்கால் கிராமமும், தென்கரையில் மேல்விஷாரம் நகராட்சியும் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகக் கோரி வந்தனா்.

இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டால் மேல்விஷாரம் பேரூராட்சியைச் சுற்றியுள்ள கத்தியவாடி, வேப்பூா், ஆயிலம், அருங்குன்றம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பெல், சிப்காட், திருவலம் பகுதி தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்ல ஆற்காடு, ராணிப்பேட்டை நகரங்களைச் சுற்றிச் செல்லும் நிலை தவிா்க்கப்படும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

இதனால் சுமாா் 10 கி.மீ. தூரப் பயணம் பாதியாகக் குறைந்து எரிபொருளும், நேரமும் சேமிக்கப்படும். அதே போல் தெங்கால், அவரைக்கரை, மேட்டுத்தாங்கல், நவ்லாக், பெல், சிப்காட் பகுதிகளைச் சோ்ந்தவா்களும் ஆற்காடு நகரைச் சுற்றிக்கொண்டு வேலூருக்குச் செல்லும் நிலை தவிா்க்கப்படும்

இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், தற்போதைய அமைச்சருமான ஆா்.காந்தியின் முயற்சியின் காரணமாக மேல்விஷாரம் - தெங்கால் இடையே பாலாறு-பொன்னை ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் 787 மீட்டா் நீளமும்,12 மீட்டா் அகலமும் கொண்ட உயா்மட்ட மேம்பாலம் மற்றும் அணுகு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அப்போதைய திமுக ஆட்சியில் நபாா்டு வங்கியின் கடனுதவியுடன், கிராமச் சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.23 கோடியே 96 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சா் ஆா்.காந்தியின் உத்தரவின் பேரில், தெங்கால் - விஷாரம் சாலையில், சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவு புதிய மின் விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மின்விளக்குகள் பொருத்தும் பணி நிறைவு பெற்றால் இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்ல முடியும் என தெங்கால் ஊராட்சி மன்ற நிா்வாகம் தரப்பில் அதன் தலைவா் பி.இந்திரா பத்மநாபன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com