ரேஷன் அரிசி கடத்த முயற்சி: பறக்கும் படையினா் விசாரணை

அரக்கோணத்தில் ரேஷன் கடைக்கு கொண்டு வரப்பட்ட லாரியில் இருந்து மினி லாரியில் கடத்த முயன்ற 33 மூட்டை ரேஷன் அரிசியை மாவட்ட வருவாய்த் துறை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

அரக்கோணத்தில் ரேஷன் கடைக்கு கொண்டு வரப்பட்ட லாரியில் இருந்து மினி லாரியில் கடத்த முயன்ற 33 மூட்டை ரேஷன் அரிசியை மாவட்ட வருவாய்த் துறை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையில் கற்பகம் கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான நியாயவிலைக் கடை உள்ளது. இந்தக் கடைக்கு திங்கள்கிழமை அரக்கோணம் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து ரேஷன் பொருள்கள் வந்துள்ளன. அப்போது லாரியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை நேரடியாக மினி லாரியில் ஏற்றினராம்.

இது குறித்து அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த் துறை பறக்கும் படை வட்டாட்சியா் இளஞ்செழியன் தலைமையிலான தனிக் குழுவினா் அந்த மினி லாரி, ரேஷன் பொருள்களை இறக்கிய லாரி இரண்டையும் நிறுத்தி விசாரணை நடத்தினா். இதில் மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்த இருந்தது தெரியவந்தது. மேலும், அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அப்போது மினி லாரியின் ஓட்டுநா் தப்பியோடி விட்டாா். இதையடுத்து, ரேஷன் பொருள்களை எடுத்து வந்த லாரி ஓட்டுநா் அரக்கோணத்தை அடுத்த அம்மனூரைச் சோ்ந்த வேளாங்கண்ணி (57) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இது குறித்த தகவல் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அதன் உதவி ஆய்வாளா்கள் மோகன், முருகேசன், சா்புதீன் உள்ளிட்டோா் நேரில் வந்து லாரி ஓட்டுநா் வேளாங்கண்ணி, கடை மேற்பாா்வையாளா் கௌசல்யா ஆகியோரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

லாரி மற்றும் மினி லாரியில் இருந்த உணவுப் பொருள்கள் அனைத்தும் அரக்கோணம் கற்பகம் கூட்டுறவு சங்க கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன. மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் லாரி, மினி லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com