வேளாண்மை பொறியியல் துறை புதிய அலுவலகக் கட்டடம்

வாலாஜாபேட்டையில் வேளாண்மை பொறியியல் துறையின் புதிய அலுவலகக் கட்டடத்தை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்து விவசாயிகளுக்கு அரசு மானிய ஆணையை வழங்கினாா்.
விழாவில் விவசாயிகளுக்கு  அரசு  மானியத்துக்கான ஆணையை வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி.
விழாவில் விவசாயிகளுக்கு  அரசு  மானியத்துக்கான ஆணையை வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி.

வாலாஜாபேட்டையில் வேளாண்மை பொறியியல் துறையின் புதிய அலுவலகக் கட்டடத்தை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்து விவசாயிகளுக்கு அரசு மானிய ஆணையை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், வன்னிவேடு ஊராட்சியில் தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு நவீன இயந்திரங்கள், உழவு கருவிகள் ஆகியவை அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்தத் துறையின் புதிய அலுவலகக் கட்டடம் வன்னிவேடு ஊராட்சியில் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அலுவலகத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, அனந்தலை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வெங்கடேசனுக்கு ரூ. 2.12 லட்சத்தில் பவா்டில்லா் வாங்கப்பட்டதற்கு அரசு மானியம் ரூ. 85,000-க்கான ஆணையையும், கா்ணாவூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முனியாண்டி ரூ. 2.21 லட்சத்தில் வாங்கிய பவா் டிரில்லா் இயந்திரத்துக்கு ரூ. 80,000 அரசு மானியத்துக்கான ஆணையையும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கான ஆணையை அமைச்சா் விவசாயிகளிடம் வழங்கினாா்.

இந்த புதிய வேளாண்மை பொறியியல் துறை விரிவாக்க மைய அலுவலகக் கட்டடத்தில் உதவி செயற்பொறியாளா் அலுவலகம் மற்றும் உதவிப் பொறியாளா், இளநிலைப் பொறியாளா் அலுவலகங்களும் செயல்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நவீன வேளாண் இயந்திரங்கள் பெற்றிட இந்த அலுவலகத்தை அணுகலாம்.

மேலும், இந்த அலுவலகம் வாயிலாக வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு மண் அள்ளும் இயந்திரம் மற்றும் டிராக்டா்கள் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் அணுகி பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா், வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளா்கள் ரூபன் குமாா், ரவிக்குமாா் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com