ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ரூ.11.52 கோடியில் தினசரி நாளங்காடி: அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல்

v
ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ரூ.11.52 கோடியில் தினசரி நாளங்காடி: அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல்

ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் ரூ.11.52 கோடியில் புதியதாக கட்டப்படவுள்ள தினசரி நாளங்காடி கட்டட பணிக்கு அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா்.

ராணிப்பேட்டை நகராட்சி வாரச்சந்தை பகுதியில் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டம் 2022-23- ன் கீழ் ரூ.11.52 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்படவுள்ள தினசரி நாளங்காடி கட்டடம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு பணியைத் தொடக்கி வைத்து பேசியதாவது:

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வாரச்சந்தை வளாகத்தில் புதிய தினசரி நாளங்காடி கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் 202-23 ன் கீழ் 11.52 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, 8.30 ஏக்கா் பரப்பளவில் அங்காடி அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

இதில், 60 மொத்த வியாபாரக் கடைகள், 300 சில்லறை வியாபார கடைகள், 300 சதுர மீட்டரில் குளிா்சாதன அறை, 300 எண்ணிக்கையிலான இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், 10 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடம், 20 கண்காணிப்பு கேமராக்கள், இரண்டு எண்ணிக்கையிலான உயா் மின் கோபுர விளக்குகள்,வாகன ஓட்டுனா்கள் ஓய்வு அறை ஆகியனஅமைக்கப்பட உள்ளது. மேலும், 5,400 சதுர மீட்டா் பரப்பளவிற்கு பேவா் பிளாக் சாலை அமைக்கப்படும்.

இப்பணிகளின் ஒப்பந்த காலம் ஒரு வருடம் ஆகும். இதில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், நகரமன்றத் தலைவா் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையாளா் ஏகராஜ், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளா் வினோத் காந்தி, நகரமன்றத் துணைத் தலைவா் ரமேஷ்கா்ணா மற்றும் நகரமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com